சேலம் மாவட்டத்தில் நேற்று பெரியாரின் 143 ஆவது பிறந்தநாள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் பிறந்தநாள் தினம் சேலம் மாநகர் மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கொண்டாடப்பட்டது. சேலம் மாவட்டம் கருப்பூர் பகுதியில் சமூக நீதி நாள் விழா மற்றும் திருமாவளவனின் 59 ஆவது பிறந்த நாள் விழா மிக பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுக் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது, நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உறுப்பினர்கள் அவர் மேடைக்கு வரும்வரை உடன் இணைந்து அழைத்து வந்தனர். நூற்றுக்கணக்கானோர் மேடைமீது ஏறியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.



பின்பு, மேடையில் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், ஒடுக்கப்பட்ட சாதியினரை ஒதுக்கி வைப்பதற்காக மத்திய அரசு செயல்பட்டு வருவதாகவும், நான் பத்தாம் வகுப்பில் 301 மதிப்பெண் பெற்ற சராசரி மாணவன், என் சமூகத்தில் நான் ஒருவன் படித்து முன்னேறியதையே மத்திய அரசு சமாளிக்க முடியவில்லை இன்னும் என் சமூகத்தை சேர்ந்த அனைவரும் படித்து இருந்தால் நீங்கள் அந்த இடத்தில் இருக்க மாட்டீர்கள் நாங்கள் தான் மத்தியில் ஆட்சி அமைத்திருக்கும் என்று கூறினார். மேலும், ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் குடியரசுத் தலைவராக சுட்டிக்காட்டிய திருமாவளவன், பிரதமர் மோடிக்கு உண்மையில் தைரியமிருந்தால் ஒரே ஒரு நாள் குடியரசுத் தலைவரை பிரதமராகி காட்டுங்கள் என்று சவால் விடுத்தார். ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன் சட்டமன்ற உறுப்பினர் ஆக முடியும், நாடாளுமன்ற உறுப்பினராக முடியும், மந்திரி ஆக முடியும், ஏன் குடியரசுத் தலைவர் கூட ஆக முடியும் ஆனால், ஒவ்வொரு பொழுதும் பிரதமராக முடியாது, ஆகவும் விட மாட்டார்கள் என்று மத்தியில் ஆளும் பாஜக அரசு கடுமையாக விமர்சித்தார். 



இத்தனை ஆண்டுகளில் இட ஒதிக்கீடு எதற்காக கேட்கிறோம் என்றால் என் தந்தை பிடிக்கவில்லை, என் தாய் படிக்கவில்லை, அவர்களது பெற்றோரும் படிக்கவில்லை, இப்படி இருக்கும் நிலையில் நாங்கள் படிக்க முன் வந்துள்ளோம், எனவே மற்றவர்கள் 90% மதிப்பெண் எடுத்தால் அது நாங்கள் எடுக்கும் 40% மதிப்பெண்ணிற்கு சமம் என்று கூறினார்‌. இந்நிகழ்ச்சியில் பல அரசியல் கட்சித் தலைவர்கள், திமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் மற்றும் திமுக சார்ந்த தோழமைக் கட்சிகளின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.



நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உறுப்பினர்கள் முகக் கவசம் அணியாமலும், சமூக இடைவினை கடைப்பிடிக்காமல் அரசின் கொரோனா விதிமுறையை காற்றில் பறக்க விட்டனர்.