தீர்ப்பு


தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ஓ. பன்னீர்செல்வத்துக்கும் இடையேயான அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பில் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வானது செல்லும் என்ற தீர்ப்பை வழங்கி ஓ. பன்னீர்செல்வத்தின் மனுவை தள்ளுபடி செய்தது.


"தர்மம் மீண்டும் வென்று இருக்கிறது”


இந்த தீர்ப்பை பற்றி முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறுகையில், ”” உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பானது ஒட்டுமொத்த தமிழக மக்களின் நலனுக்கான தீர்ப்பு. தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; இந்த தீர்ப்பின் மூலம் தர்மம் மீண்டும் வென்று இருக்கிறது என்றார். மேலும், அனைவரும் எதிர்பார்க்கப்பட்ட தீர்ப்பு தான் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது. நீதி என்றைக்கும் வெல்லும் என்பதற்கு இந்த தீர்ப்பு உதாரணம் என்று நத்தம் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.


அதேபோல், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறியதாவது, ”உச்சநீதிமன்ற தீர்ப்பு அதிமுக தொண்டர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. இரட்டை இலை சின்னத்தில் அதிமுக சிறப்பாக  பணியாற்ற மிகப்பெரும் வாய்ப்பை இந்த தீர்ப்பு உருவாகி உள்ளது. ஆரம்ப காலத்தில் இருந்தே எடப்பாடி வசம் தான் அதிமுக செல்லும் என்ற எண்ணத்தில் தமாகா உறுதி இருந்ததாக" தெரிவித்துள்ளார். 


பின்னணி


எடப்பாடி தலைமையில் கடந்த ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழு செல்லும் என்று உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மேல்முறையீட்டு மனுவானது உச்சநீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஷ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது.


இதில், இரு தரப்பு வாதங்களும் நீதிபதிகள் முன்பு வைத்தனர். இதையடுத்து, அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தல் நடத்த ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டிருந்த தடையையும் உச்சநீதிமன்றம் நீட்டித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வழக்கு கடந்த ஆண்டு டிசம்பர் 15ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது, 2023ஆம் ஆண்டு ஜனவரி 4ஆம் தேதிக்கும், அதன் பின்னர் ஜனவரி 9ஆம் தேதிக்கும், வழக்கினை மீண்டும் ஒத்திவைத்தது.


கடந்த 16ஆம் தேதி இரு தரப்பையும் எழுத்து பூர்வமான பதிலை கேட்டனர். இந்த வழக்கின் தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு தான் அதிமுகவின் அரசியல் எதிர்காலம் இருக்கப்போகிறது என்பதால் இந்த தீர்ப்பு மிகவும் முக்கியமானதாக பார்க்கப்பட்டது.  தற்போது உச்சநீதிமன்றம் வழங்கிய இந்த தீர்ப்பின் மூலம் கட்சி எடப்பாடிக்கு தான் என தெரிய வந்துள்ளது. 




மேலும் படிக்க


Aiadmk Leadership: “எடப்பாடி பழனிசாமியின் தர்மயுத்தம் வென்றது” - உற்சாகத்தில் இபிஎஸ் தரப்பு