நாடாளுமன்றத்தில் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்காக நடத்தப்பட்ட பிறந்த நாள் கொண்டாட்டத்தில் மத்திய அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்து கொள்ளாததைக் காங்கிரஸ் தலைவர்கள் கண்டித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் பாஜகவினர் `அடிப்படை பண்பு இல்லாதவர்கள்’ என்றும், `இந்திய அரசியல் மற்றும் விடுதலைப் போராட்ட வரலாற்றில் இருந்து ஜவஹர்லால் நேருவின் பெயரை நீக்கும் முயற்சி’ எனவும் காங்கிரஸ் தலைவர்கள் விமர்சித்துள்ளனர்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜெய்ராம் ரமேஷ் இந்த நிகழ்ச்சியில் மக்களவை சபாநாயகர், மாநிலங்களவைத் தலைவர், பல்வேறு மத்திய அமைச்சர் கலந்துகொள்ளாததைச் சுட்டிக்காட்டி, அதனை எதிர்பார்க்கவில்லை எனவும், மோசமான நடவடிக்கை எனவும் விமர்சித்துள்ளார். மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினர் அபிஷேக் மனு சிங்வியும் பாஜகவினரை இந்த விவகாரத்தில் கண்டித்துள்ளார்.
`இது வெட்கக்கேடான செயல். அடிப்படை பண்பும், அரசியல் நாகரிகமும் தெரியாதவர்களையே இது காட்டுகிறது. நேருவின் கருத்தியலுக்கும் அவர்களது கருத்தியலுக்கும் முரண் உண்டு. இருந்தும் இந்தியாவுக்கு முதல் பிரதமராகவும், 17 ஆண்டுகள் பிரதமராகவும் இருந்த ஒரு தலைவரை எப்படி தொடர்ந்து அவமானப்படுத்தலாம்?’ என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அதிர் ரஞ்சன் சௌத்ரி பாஜகவைக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
`மோடி தன்னை மிகச் சிறந்த பிரதமர் என்று முன்னிறுத்த முயல்கிறார். அதனால் அவரும், அவரது கட்சியினரும் நேருவின் வரலாற்றை அழிக்க முயல்கின்றனர். இந்திய அரசியல் வரலாற்றில் இருந்தும், சுதந்திரப் போராட்ட வரலாற்றில் இருந்தும் நேருவின் புகழை நீக்க நினைக்கின்றனர். ஆனால் இந்த நாட்டின் தலைவராக இருப்பவருக்குப் பெரிய மனது வேண்டும்; அது மோடியிடம் இல்லை’ என்றும் அதிர் ரஞ்சன் சௌத்ரி தெரிவித்துள்ளார்.
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கடந்த 2019, 2020ஆம் ஆண்டுகளில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இந்த ஆண்டு அவர் ஜெய்ப்பூரில் உள்ள ராஜஸ்தான் விதான்சபா நடத்திய விழாவில் கலந்துகொண்டதால், நாடாளுமன்றத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை என நாடாளுமன்ற அதிகாரிகள் கூறியுள்ளனர். எனினும், இதுகுறித்து பாஜக தரப்பில் எந்தக் கருத்தும் கூறவில்லை.
காங்கிரஸ் தலைவர்களின் விமர்சனங்கள் இவ்வாறு இருக்க, மற்றொரு தரப்பில் பாஜகவினர் ட்விட்டரில் முன்னாள் பிரதமர் நேருவின் பிறந்தநாளின் போது தங்கள் அஞ்சலியைத் தெரிவித்துள்ளனர்.