சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி இன்று அறிவித்துள்ளார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரின்போது இந்த மூன்று சட்டங்களும் வாபஸ் பெறப்படும் என்று உறுதி அளித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி டெல்லி எல்லையில் போராடி வரும் விவசாயிகள் தங்கள் போராட்டங்களை கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். கடந்த ஆண்டு குளிர்கால கூட்டத்தொடரின் போது தான் 3 வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆனால் இது பெரும் தொழிலதிபர்களுக்கு சாதகமாக இருப்பதாகவும் சிறு குறு விவசாயிகளுக்கு பாதகமாக இருப்பதாகவும் கூறி கிட்டத்தட்ட ஓராண்டாக தொடர்ந்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில்தான் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இங்கெல்லாம் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீவிர போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன என்பதால் பாஜக வெற்றி பெறுவதற்கு மிகவும் சிரமம் என்று தகவல்கள் வெளியாகிக் கொண்டிருந்தன. விவசாயிகள் போராட்டம் நாடுமுழுவதும் கவனம் பெற்றதாலும், போராட்டத்தில் கார் விபத்து ஏற்பட்டதாலும் பாஜக ஆளும் மாநிலங்களான உத்தரபிரதேசம், உத்தரகாண்ட்டிலும் கூட வெற்றி பெற முடியாத சூழ்நிலை வருமென்பதை பல நாட்களாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வரும் நிலையில், பஞ்சாப் மாநிலத்தை கைப்பற்றும் கனவில் இருக்கும் பாஜவிற்கு இது பெரும் தடையாக இருக்கும் என்று நம்பப்பட்டது. பல அரசியல் விமர்சகர்கள் 2022 தேர்தலின் எக்ஸ்-ஃபேக்டர் வேளாண் சட்டங்கள் தான் என்று கூறினார்கள். இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இவ்வாறு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இன்று காலை 9 மணிக்கு அவர் பேசும்போதும் கவனமாக வார்த்தைகளை பயணப்படுத்தினார். "விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்களை நான் பார்த்திருக்கிறேன். நம் நாட்டில் 100 விவசாயிகளில் 80 பேர் சிறு விவசாயிகள், 2 ஏக்கருக்கும் குறைவான நிலமே அவர்களிடம் உள்ளது. விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்களை நான் உணர்ந்துள்ளேன். விவசாயிகளுக்கு சேவை செய்வதே எங்கள் அரசின் நோக்கம்." என்று தங்கள் அரசினை முன்வைத்து கூறியிருக்கிறார். அதனால் இம்முறை பஞ்சாப்பையும் கணகிக்கில் கொண்டு ஐந்து மாநில தேர்தலை வைத்து நோக்கும் போது, வேளாண் சட்டங்கள் பெரும் முக்கியத்துவம் பெறுகின்றன. நாடு முழுவது கிளம்பிய எதிர்ப்பால் மணிப்பூர் மற்றும் கோவா தேர்தல்களிலும் இதன் எதிரொலி இருப்பதற்கான வாய்ப்புகள் இருந்தன, ஆனால் மோடியின் இந்த அறிவிப்பு வரவிருக்கும் தேர்தலில் பெரும் திருப்பு முனையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தளராமல் போராடிய விவசாயிகளின் திடமான வெற்றி என்றாலும் கூட இதற்கு பின்னால் தேர்தல் கணக்கு இருக்கிறதா என்ற சந்தேகத்தை எழுப்பதான் செய்கிறது.