சிவகங்கை மற்றும் மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க நேற்று முன்தினம் சென்னையில் இருந்து விமான மூலம் மதுரை விமான நிலையத்திற்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருகை தந்த போது அவரோடு சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியை சேர்ந்த ராஜேஸ்வரன் பயணம் செய்த நிலையில் எடப்பாடி பழனிசாமியை வீடியோ எடுத்து பேஸ்புக் லைவ் செய்த ராஜேஸ்வரன், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து பேசினார். இதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியின் பாதுகாவலர் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் ராஜேஸ்வரனின் செல்போனை பறித்து அ.தி.மு.கவினர் தாக்கினர். இரு தரப்பினரும் மாறி மாறி புகார் அளித்த நிலையில் விமான நிலைய சம்பவம் தொடர்பாக இரண்டு தரப்பு மீதும் மதுரை மாநகர காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
எடப்பாடி பழனிசாமி, அவரின் பாதுகாவலர் கிருஷ்ணன், சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன், முன்னாள் அமைச்சர் மணிகண்டன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி மகன் மற்றும் அடையாளம் தெரியாத அதிமுக நபர் ஒருவர் ஆகிய 6 பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்நிலையில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்ததை கண்டித்து மதுரை பழங்காநத்தம் ஜெயம் தியேட்டர் அருகில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா ஆகியோர் தலைமையில் திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மதுரை மாநகர், புறநகர், மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் 1000க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டு காவல்துறையை கண்டித்தும், திமுக அரசை கண்டித்தும் கருப்பு சட்டை அணிந்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
மேடையில் ராஜன் செல்லப்பா பேசுகையில்,’ தீ பரவட்டும் என்பது போல மதுரையில் இருந்து போராட்டம் தமிழகம் முழுவதும் பரவட்டும். ஜெயலலிதா அடையாளங்காட்டிய தலைவராக அ.தி.மு.கவை, தொண்டர்களை கட்டி பழனிசாமி காத்துக்கொண்டுள்ளார். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போல ஒற்றைத்தலைமையாக அ.தி.மு.க.,வை எடப்பாடி பழனிசாமி காப்பாற்றி வருகிறார். தலைமையை முடக்க வேண்டும் என திமுக அரசு வழக்குப்பதிவு தொடுத்துள்ளனர். நாங்கள் கிளைச்செயலாளரிடம் பிரச்சனை செய்தாலே விடமாட்டோம். ஆனால் திட்டமிட்டு எடப்பாடி பழனிசாமி மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. முன்னாள் முதலமைச்சருக்கு இதுபோன்ற நிலைமை ஏற்பட்டதை அறிந்து இங்குள்ள காவல் ஆணையரிடம் முதலமைச்சர் தகவல் கேட்டிருக்க வேண்டாமா? அதிமுக மீது எத்தனையோ வழக்குகள் போட்டாலும் அதெல்லாம் நிற்கவில்லை. ஜெயலலிதா கார் மீது விபத்து ஏற்படுத்தி அரசியல் வாழ்க்கையை முடிக்க வேண்டும் என செய்தது போல, எடப்பாடியாரை தாக்கி அவர் அரசியல் வாழ்வை முடிக்க வேண்டும் என கங்கணம் கட்டி இச்செயலை செய்துள்ளதாக நினைக்க தோன்றுகிறது. அதிமுக எடப்பாடி பழனிசாமி தலைமையில் மட்டும் தான் இயங்கும். இரட்டை இலை கிடைத்துவிட்டதால் நமக்கு இனிமேல் வெற்றி தான். மேல்அதிகாரிகள் கூறியதை கீழே உள்ள அதிகாரிகள் ஜோடித்து எழுதியுள்ளனர். அதிமுகவை யார் நினைத்தாலும் அழிக்க முடியாது" என பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசுகையில், "திமுகவின் பி.டீம் துரோகிகள் இணைந்து சிவகங்கை பொதுக்கூட்டத்திற்கு எதிராக நீதிமன்றம் சென்றனர். நயவஞ்சக, மக்கள்விரோத அரசாக திமுக அரசு உள்ளது. நெஞ்சுறுதி இல்லாதவர்கள், கருணை இல்லாதவர்கள், சட்டம் தெரியாதவர்கள் தான் எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். அதிமுக கொடுத்த புகார் மனுவை புறந்தள்ளிவிட்டு ஊர்பேர் தெரியாத புறம்போக்குகள் கொடுத்த மனுவை வைத்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதிமுக மீது சட்டவிதிமுறைகள் மீறுமானால் மதுரையிலே மனிதவெடிகுண்டாக அதிமுக தொண்டர்கள் மாறுவார்கள் என எச்சரிக்கை விடுக்கிறேன். ஸ்டாலின் அதிமுகவுக்கு பூச்சாண்டி காட்ட வேண்டாம். விரைவில் ஸ்டாலின் கோட்டையில் இருந்து வீட்டுக்கு செல்வார். எடப்பாடி பழனிசாமி வீட்டில் இருந்து கோட்டைக்கு செல்வார்" என பேசினார்.
தொடர்ந்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசுகையில், "முன்னாள் முதல்வர் கருணாநிதி கூட இப்படியெல்லாம் எதிர்க்கட்சி மீது வழக்கு போட்டதில்லை. எந்த முதல்வரும் செய்யாத செயலை ஸ்டாலின் செய்துள்ளார். சோதனை வரும்போதெல்லாம் தொண்டர்கள் தான் உடன் உள்ளனர். அதிமுக கூட்டத்தை கூட்டினால் மதுரை தாங்குமா? மக்களுக்கு அல்வா கொடுத்து ஏமாற்றி வரும் திமுக மக்களை திசை திருப்ப எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மக்களுக்கு நல்லதை செய்யாவிட்டாலும், சில நல்ல செயல்களால் மக்கள் மத்தியில் ஒரு நல்ல பெயரை ஸ்டாலின் வாங்குவார் என நேற்று முன்தினம் வரை நான் நினைத்தேன். ஆனால் இவ்வளவு திமிர் ஆவணம் இறுமாப்போடு ஸ்டாலின் உள்ளார். ஸ்டாலினுக்கும், அவர் குடும்பத்தாருக்கும் தமிழகம் என்ன குத்தகை விடப்பட்டதா? காலம் மாறாதா? இப்படியே இருந்துவிடுமா?ஈரோட்டில் சுட்டது போல இங்கே வடையும், பரோட்டாவும் போட முடியுமா. பிரியாணியும், பணமும் கொடுக்க முடியுமா?
திமுக தன் குறைபாட்டை மறைக்கவே பொய்யான வழக்கை பதிவு செய்துள்ளனர். அமைதியாக தமிழகம் இருக்கக்கூடாது என முதல்வர் நினைக்கிறாரா? தேவையற்ற வழக்குகளை போட்டு மக்களை தொந்தரவு செய்ய வேண்டும் என முதல்வர் நினைக்கிறாரா? கருணாநிதியையே ஆட்டிப்படைத்தது அதிமுக. நீங்கள் எம்மாத்திரம். அழகிரிக்கும் அதிமுக தொண்டர்களை பற்றி தெரியும். எங்கள் தலைவர்களை பற்றி பேசினால் தொண்டர்கள் சும்மா இருக்க மாட்டார்கள். ஜெயலலிதாவின் மறுபதிப்பாக எடப்பாடி பழனிச்சாமி உள்ளார்.
எடப்பாடி குரலில் கொஞ்சம் கூட பதட்டம் இருந்ததில்லை. திமுகவுக்கு சரியான பதிலடி கொடுக்கக்கூடிய தலைவராக எடப்பாடி மட்டுமே இருக்கிறார். அருகில் தான் கோவலன்பொட்டல் உள்ளது. தவறான தீர்ப்பு கொடுத்து கண்ணகி நீதி கேட்டதால் தான் பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனும்,
வரது மனைவியும் இறந்து போனர். அதுபோல தவறான வழக்குப்பதிவு செய்த முதல்வர் அப்படி செய்ய வேண்டாம். தவறான வழக்குப்பிரிவுகளில் எடப்பாடி பழனிச்சாமி வழக்குப்பதிவு செய்த காவல்துறை மீது ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும், அப்போது தான் நீங்கள் கருணாநிதியின் மகன். ஜூபூம்பா காட்டி மக்களை ஏமாற்றியது போல எங்களை ஏமாற்ற முடியாது” என பேசினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்