கடந்த ஜூலை 11-ந் தேதி அ.தி.மு.க. பொதுக்குழு நடைபெற்ற தினத்தன்று, ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தை கைப்பற்றினர். அப்போது, ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கும், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் நடந்தது. இந்த மோதல் கலவரமாக மாறியது. அப்போது, அ.தி.மு.க. அலுவலகம் சூறையாடப்பட்டதுடன், அலுவலகத்தில் இருந்த ஆவணங்கள் மாயமானது.


இந்த கலவரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில்,  அ.தி.மு.க. அலுவலகத்தில் கொள்ளை போனதாக கூறப்பட்ட அனைத்து ஆவணங்களும் மீட்கப்பட்டதாக சி.பி.சி.ஐ.டி. அறிவித்துள்ளது.




அ.தி.மு.க. தலைமை அலுவலக பத்திரம், ஜானகி அம்மாள் எழுதி கொடுத்த ஆவணம், அண்ணா டிரஸ்ட் ஆவணம், புதுச்சேரி, திருச்சி மற்றும் மதுரையில் உள்ள கட்சி அலுவலக சொத்து பத்திரம் உள்ளிட்ட 113 ஆவணங்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் அறிவித்துள்ளனர். இந்த ஆவணங்கள் அனைத்தும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரான கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தியிடம் இருந்து கைப்பற்றப்பட்டதாக சி.பி.சி.ஐ.டி. அறிவித்துள்ளது. இதன்மூலம், அ.தி.மு.க. அலுவலகத்தில் இருந்து மாயமாகிய அனைத்து ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது. கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தியிடம் இருந்து மீட்கப்பட்ட அனைத்து ஆவணங்களும் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 


மேலும் படிக்க : அடுத்த முதலமைச்சர் யார்? ட்விஸ்ட் மேல ட்விஸ்ட்... ராஜஸ்தான் அரசியலில் நெருக்கடி


மேலும், அ.தி.மு.க. அலுவலக கலவர வழக்கில் ஓ.பன்னீர்செல்வம் உள்பட 60 பேர் மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். முன்னதாக, அ.தி.மு.க. பொதுக்குழுவிற்கு முன்பு எடப்பாடி பழனிசாமி – ஓ.பன்னீர்செல்வம் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது. பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிரான செயல்பாடுகள் அமைந்ததால், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் அதிருப்தி அடைந்தனர்.




இந்த சூழலில், கடந்த ஜூலை 11-ந் தேதி பொதுக்குழுவை ஓ.பன்னீர்செல்வம் புறக்கணித்தார். அப்போது, அவருடைய ஆதரவாளர்களுடன் சென்று அ.தி.மு.க. அலுவலகத்தை கைப்பற்றினார். அப்போது, ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டனர். இந்த கலவரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் ராயப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுதவிர, அ.தி.மு.க. பொதுக்குழு பற்றிய தனிநீதிபதி வழங்கிய தீர்ப்பு செல்லாது என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதும், தற்போது அ.தி.மு.க.  இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க : தமிழ்நாடு அரசுக்கு எதிராக பரிந்துரையா? ஆளுநர் ரவியின் டெல்லி விஜயம் குறித்து பரபரப்பு தகவல்!


மேலும் படிக்க : தமிழகத்தில் பாஜக இதைத்தான் செய்கிறது; அதிமுகவுக்கு புரிகிறதா? - திருமாவளவன் சரவெடி பேச்சு