ராஜஸ்தான் அரசியலில் அதிரடி திருப்பங்கள் நிகழ்ந்து வருகிறது. காங்கிரஸ் தலைவர் பதவிக்கு அம்மாநில முதலமைச்சரும் மூத்த தலைவருமான அசோக் கெலாட் போட்டியிடுவதால் அவர் வகித்து வரும் பதவி, கட்சியின் மற்றொரு முக்கிய தலைவர் சச்சின் பைலட்டுக்கு செல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது அதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


2020 ஆம் ஆண்டில், பைலட் மற்றும் அவரது ஆதரவு 18 எம்எல்ஏக்கள் சொந்த கட்சிக்கு எதிராக செயல்பட்டபோது, அரசை ஆதரித்த 102 எம்.எல்.ஏக்களில் ஒருவருக்கே முதலமைச்சர் பதவி அளிக்க வேண்டும் என கெலாட் ஆதரவு 56 எம்எல்ஏக்கள் ஒருமனதாக முடிவு செய்துள்ளனர்.


அடுத்த முதலமைச்சர் யார் என்பதை தேர்வு செய்யும் வகையில் காங்கிரஸ் சட்டப்பேரவை கட்சி கூட்டம் நடைபெற உள்ள நிலையில், 16 அமைச்சர்கள் உள்பட கெலாட் ஆதரவாளர்கள் இன்று மாலை அமைச்சர் சாந்தி தரிவாலின் வீட்டில் சந்தித்து பேச உள்ளனர். 


கெலாட், தற்போது ஜெய்சால்மரில் உள்ளார். ஆனால், மாலையில் நடைபெறும் முக்கியத்துவம் வாய்ந்த காங்கிரஸ் கூட்டத்திற்கு அவர் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் மாநில பொறுப்பாளர் அஜய் மாக்கன் ஆகியோர் தலைமையில் இந்த கூட்டம் நடைபெறும். ஆனால், அடுத்த முதலமைச்சரை அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தியே அறிவிப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிடும் கெலாட், பைலட்டுக்கு செக் வைக்கும் வகையில் முதலமைச்சர் பதவியை விட்டு விலக தயக்கம் காட்டினார். ஆனால், கட்சியில் “ஒருவருக்கு ஒரு பதவி” என்ற விதியில் ராகுல் காந்தி உறுதியாக இருந்ததால், அவரது கைகள் கட்டப்பட்டுள்ளன. இருப்பினும், தான் இல்லையென்றாலும், தனது ஆதரவாளர் ஒருவரை முதலமைச்சராக ஆக்க வேண்டும் என அவர் விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.


200 சட்டப்பேரவை இடங்கள் கொண்ட ராஜஸ்தானில், காங்கிரசுக்கு 100 எம்.எல்.ஏ.க்களும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து காங்கிரஸில் சேர்ந்த 6 பேரும் ஆதரவு அளித்து வருகின்றனர். இச்சூழ்நிலையில், காங்கிரஸுக்கு 101 எம்எல்ஏக்கள், அதாவது சரியாக பெரும்பான்மைக்கு தேவைப்படும் எண்ணிக்கையிலேயே ஆதரவு உள்ளது. இதன் காரணமாக, ஆட்சியை நிலையாக வைத்து கொள்ள சுயேச்சைகளின் ஆதரவு தேவைப்படுகிறது.


13 சுயேச்சை எம்எல்ஏக்களின் ஆதரவு ராஜஸ்தானில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. 13 பேரில் 12 பேர் கெலாட்டுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் தொடர்பான அறிவிப்பாணை செப்டம்பர் 22ம் தேதி அன்று வெளியிடப்பட்டது.


அதன்படி, தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செப்டம்பர் 24 ம் தேதி முதல் 30 ம் தேதி வரை நடைபெறும் என்றும், அக்டோபர் 17 ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது.


ராகுல் காந்தியை மீண்டும் காங்கிரஸ் தலைவராக்க வேண்டும் என்ற கோரிக்கை அக்கட்சியின் தொண்டர்கள் மத்தியில் மீண்டும் எழுந்த போதிலும், காந்தி குடும்பத்தை சேராத ஒருவரே கட்சியின் தலைவராக வேண்டும் என்பதில் ராகுல் காந்தி உறுதியாக இருக்கிறார் என தகவல் வெளியானது. 


இதற்கிடையே, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ராஜஸ்தான் முதலமைச்சருமான அசோக் கெலாட், திருவனந்தபுரம் எம்.பி. சசிதரூர் ஆகியோர் போட்டியிடுவது உறுதியானது. இதையடுத்து, இந்த போட்டியில், மத்தியப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் கமல் நாத் போட்டியிடலாம் என தகவல் வெளியாகியுள்ளது. அவரின் பெயர் பரிசீலனையில் இருப்பதாகவும் போட்டியிட வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.