நாட்டின் பல்வேறு மாநிலங்களில் அமைந்துள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்புக்கு தொடர்புடைய இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) கடந்த செப்டம்பர் 22 (வியாழக்கிழமை) காலை சோதனை நடத்தியது. உத்தரப் பிரதேசம், கேரளா, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட பத்து மாநிலங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு சோதனைகளை நடத்தியது.
இதில், பிஎஃப்ஐ அமைப்பை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். என்ஐஏ, அமலாக்கத்துறை இயக்குனரகம் மற்றும் மாநில போலீசார் ஒருங்கிணைந்து சோதனை நடத்தினர். அதிகபட்சமாக கேரளாவில் 22 பேரும் மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் தலா 20 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அடுத்தபடியாக, ஆந்திரப் பிரதேசத்தில் 5 பேரும், அஸ்ஸாமில் 9 பேரும் கைது செய்ப்பட்டுள்ளனர். டெல்லி (3), மத்தியப் பிரதேசம் (4), புதுச்சேரி (3), தமிழ்நாடு (10), உத்தரப் பிரதேசம் (8) மற்றும் ராஜஸ்தான் (2) ஆகிய மாநிலங்களிலும் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுவரை, நடைபெற்ற மிகப்பெரிய சோதனை நடவடிக்கையாக இது கருதப்படுகிறது. பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி அளித்தல், பயங்கரவாதிகளுக்கு பயிற்சி முகாம்களை ஏற்பாடு செய்தல், தீவிரவாத குழுக்களில் சேர மற்றவர்களை மூளைச்சலவை செய்தல் போன்றவற்றில் ஈடுபட்டதாகக் கூறி சோதனைகள் நடத்தப்பட்டன.
இதையடுத்து, கைது நடவடிக்கையை கண்டித்து தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் பிஎஃப்ஐ அமைப்பின் உறுப்பினர்கள் போராட்டம் நடத்தினர்.
பிஎஃப்ஐ சோதனையை தொடர்ந்து, தமிழ்நாட்டில் கோவை, சேலம், ஈரோடு, கன்னியாகுமரி உள்பட சில இடங்களில் பாஜக, இந்து முன்னணி அலுவலகங்கள் மற்றும் வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இதனால், பல்வேறு பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இச்சூழலில், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படுபவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும் என்று டிஜிபி சைலேந்திரபாபு எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை இணை அமைச்சர் பானு பிரதாப் சிங் வர்மா கூறுகையில், "இந்த சம்பவங்கள் தொடர்பாக தமிழ்நாடு அரசிடம் விரிவான அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
இந்த பரபரப்பான அரசியல் சூழலில் ஆளுநர் ஆர்.என். ரவி இன்று அவசரமாக டெல்லி செல்ல உள்ளார். பயணம் மேற்கொள்ளும் ஆளுநர் ரவி நாளை டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க உள்ளார்.
அப்போது, தமிழ்நாட்டில் நடைபெறும் சம்பவங்கள் தொடர்பாக அறிக்கை வழங்குவார் என்று தகவல் வெளியாகி உள்ளது. மேலும், உள்துறை அமைச்சக உயர் அலுவலர்களையும் அவர் சந்தித்து பேச இருப்பதாகவும் கூறப்படுகிறது. டெல்லியில் 3 நாட்கள் தங்கும் ஆளுநர் ரவி வருகிற 30ஆம் தேதி (வெள்ளி) சென்னை திரும்ப உள்ளார். ஆளுநரின் திடீர் டெல்லி பயணம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.