தமிழ்நாட்டை தி.மு.க.விற்கு அடுத்தபடியாக அதிக காலம் ஆண்ட கட்சி என்ற பெருமைக்குரிய கட்சி அ.தி.மு.க. ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வில் ஏற்பட்ட பிளவுகளும், சறுக்கல்களும் நாம் அறிந்ததே. சசிகலா, தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பிரிந்து சென்றதும், சமீபகால தேர்தல்களில் அ.தி.மு.க. தொடர் தோல்வி  அடைந்து வருவதும் அ.தி.மு.க.வின் தொண்டர்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், பிரிந்துள்ள அ.தி.மு.க.வை ஒன்றிணைய வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.


இந்த நிலையில், அ.தி.மு.க.வை ஒருங்கிணைக்க ஜே.சி.டி. பிரபாகரன், புகழேந்தி, கே.சி.பழனிசாமி ஆகியோர் இணைந்து அதிமுக ஒருங்கிணைப்பு குழுவை உருவாக்கி உள்ளனர்.  இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பு சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்றது. அப்போது ஜே.சி.டி. பிரபாகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது, 


"பிரிந்து கிடைக்கும் அனைவரும் ஒன்று சேர வேண்டும் என நாடாளுமன்ற தேர்தலுக்கு பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தேன். பதிவாக வெளியிடுவது மட்டும் போதாது என்பதால் தற்போது இந்த இயக்கத்தை தொடங்கியுள்ளோம். அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவில் இருந்து நான் விலகிக் கொள்கிறேன் யார் தலைமையை என்பதை குறிப்பிட்டு சொல்வது எங்கள் வேலை அல்ல. அனைவரிடம் கலந்து பேசி அ.தி.மு.க.வை ஒன்றினைப்பதுதான் எங்கள் வேலை. சசிகலா, எடப்பாடி, ஓ.பி.எஸ் அனைவரும் அமர்ந்து பேசி ஒருமித்த கருத்து எடுக்க வேண்டும் என விரும்புகிறோம்." இவ்வாறு அவர் கூறினார்.


அ.தி.மு.க.வை ஒழிக்க நினைக்கிறார்கள்:


இதையடுத்து, பேசிய புகழேந்தி கே.சி. பழனிசாமி எனக்கு நேர் எதிரானவர். ஆனால் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என ஜே.சி.டி. சொன்னதால் இன்று ஒன்றாக வந்துள்ளோம். மிகவும் வேதனையாக இருக்கிறது. அதிமுக 7 இடத்தில் டெபாசிட் வாங்கவில்லை. கடந்த முறை ஒரு இடம். தற்போது அதுவும் இல்லை. பல இடங்களில் அ.தி.மு.க. 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.  ஜெயலலிதாவை இந்துதுவா தலைவி என்று சொன்ன அந்த கட்சி தோற்றுவிட்டது. எங்கள் கட்சியின் முன்னாள் தலைவர்களை பற்றி தவறாக பேசும் கட்சியை ஏற்றுக்கொள்ள முடியாது. ஓ.பி.எஸ்.க்கும் எங்களுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், அவர் ஒரு திசையை நோக்கி பயணிக்கிறார். அதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.  யாரோ அதிமுகவை மொத்தமாக அழிக்க நினைக்கிறார்கள். அதிமுகவை ஒழிப்பொம் என்று சொன்னால் அந்த தேசியக் கட்சியை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.


எடப்பாடி இறங்கி வருவார்:


40 இடங்களையும் வெற்றி பெற வைத்த மக்களுக்கு பாராட்டுகள். முதல்வருக்கும் வாழ்த்துகள் பா.ஜ.க. - திமுக என்ற சூழ்நிலைக்கு தற்போது வந்துள்ளது. இதை என்னால் பார்க்க முடியவில்லை.  அனைவரும் ஒன்று சேர வேண்டும் என 4 திசையில் இருந்தும் தொண்டர்கள் ஒலிக்கிறார்கள்.  உங்களை இணைக்க முடியாது என ஒருவர் சொல்கிறார்.  நான் வேண்டி கேட்டுக் கொள்கிறேன். அனைவரும் கீழே இறங்கி வாருங்கள். கீழே இருப்பவர்கள் கூட உயர்ந்த பதவிக்கு வரலாம் என எடப்ப்பாடி சொல்கிறார். யார் வேண்டுமானாலும் தலைமைக்கு கொண்டுவரட்டும். நாங்கள் தற்போது வேகத்தை காட்டவில்லை. விவேகத்தை காட்டுகிறோம். 


விஜயகாந்த் அனுதாப அலை நன்றாக பேசியது. விஜயபிரபாகரன் ஜெயித்திருக்கலாம் என்று நினைத்தேன். தருமபுரியில் சவுமியா அண்புமனியும் முன்னிலையில் இருந்தார். இது போல அதிமுகவும் முன்னிலையில் வரவில்லையே என கண் கலங்கியது. அதிமுகவை ஒருங்கிணைக்கும் எங்கள் முயற்சிக்கு எடப்பாடி இறங்கி வருவார் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.


ஒன்றிணைப்போம்:


இதையடுத்து, பேசிய கே.சி. பழனிசாமி நாங்கள் எந்த அணியையும் சாராமல் அ.தி.மு.க. ஒருங்கிணைக்கும் பணியில் முயற்சி செய்ய இருக்கிறோம். அதிமுகவுக்குள்ளேயே இருந்துகொண்டு தேசிய கட்சியை ஆதரிக்கக் கூடாது. எந்த குடும்பத்திற்கும் அதிமுக சென்று விடக்கூடாது. நாடாளுமன்ற தேர்தல் முடிவை ஒரு பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டும். இன்னொரு தொல்வியை சந்தித்தால் தொண்டர்கள் தலைவர்களை மன்னிக்க மாட்டார்கள். அதற்கு எல்லாரையும் ஒன்றிணைப்போம். சசிகலா, ஓ.பி.எஸ்,. இ.பி.எஸ், ஆகியோருடன் பேசி ஒன்றிணைப்போம்.


இந்த விசயத்தில் தமிழகம் முழுவதும் உள்ள தொண்டர்கள் கடிதம், தொலைபேசி என எதன் மூலமாகவும் கருத்து தெரிவிக்கலாம் தேவை பட்டால் மாவட்டம் தோறும் சென்று தொண்டர்களை சந்தித்து கருத்துக்காளை பெறுவோம். இன்னும் 18 மாதம்தான் இருக்கிறது. அதற்குள் இந்த இயக்கத்தை வலிமை படுத்த வேண்டும். உள்கட்சி பிரச்சனைக்கு முற்று புள்ளி வைத்து பயணிக்க வேண்டும் என்றார்.