மாநில கட்சியாக நாம் தமிழர் கட்சி அங்கீகாரம் பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்த த.வெ.க. தலைவர் விஜய்க்கு, சீமான் நன்றி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கடந்த ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற்றது. இதில் மத்தியில் பாஜக கூட்டணி கட்சிகள் ஆதரவோடு தொடர்ந்து 3வது முறையாக ஆட்சியைப் பிடித்தது. அதேசமயம் தமிழ்நாட்டில் திமுக கூட்டணி 40 இடங்களிலும் வென்றது. அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. அதேசமயம் திமுக கூட்டணியில் போட்டியிட்ட திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சி, தனித்து போட்டியிட்ட சீமானின் நாம் தமிழர் கட்சி 8% வாக்குகளை பெற்றிருப்பதால் மாநில கட்சியாக அங்கீகாரம் பெற்றுள்ளது.
இது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது. போட்டியிட்ட தேர்தல்களில் தோல்வி என்றாலும் நாம் தமிழர் கட்சியின் வாக்கு வங்கி ஒவ்வொரு தேர்தலுக்கும் உயர்ந்து கொண்டே வருகிறது. மேலும் வழக்கமான கரும்பு விவசாயி சின்னம் இல்லாமல் இம்முறை முதல் தடவையாக நாம் தமிழர் கட்சி மைக் சின்னத்தில் போட்டியிட்டும் வாக்கு வங்கி பெற்றிருப்பது பேசுபொருளாகி உள்ளது. இதனிடையே நாம் தமிழர் கட்சிக்கு கடந்த சில தினங்களுக்கு முன் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்திருந்தார்.
அவர் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், “நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்களின் நம்பிக்கையைப் பெற்று, மாநிலக் கட்சிகளாக அங்கீகாரம் பெறும் தகுதியை வென்றெடுத்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும், நாம் தமிழர் கட்சிக்கும் எனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்" என கூறியிருந்தார். இந்நிலையில் விஜய்யின் வாழ்த்துக்கு பதிலளித்துள்ள நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், “மக்களின் நம்பிக்கையைப் பெற்று மாநிலக் கட்சியாக அங்கீகாரம் பெற்ற நாம் தமிழர் கட்சி! உளமார பாராட்டி, வாழ்த்துத் தெரிவித்த ஆருயிர் தம்பிக்கு நன்றி!” என தெரிவித்துள்ளார்.
இதுவரை தேர்தல்களில் கூட்டணி வைக்காமல் நாம் தமிழர் கட்சி போட்டியிட்டு வருகிறது. அதேசமயம் விஜய்யின் அரசியல் வருகையை பெரும்பாலானோர் எதிர்த்த நிலையில் சீமான் முதல் ஆளாக வரவேற்றார். அதேசமயம் கட்சி கொள்கைகளோடு ஒத்துப்போனால் கூட்டணி வைக்கலாம் எனவும் கூறியிருந்தார். இந்நிலையில் சீமான், விஜய் இருவரும் 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைப்பார்களா என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.