சீமான் - பெரியார் விவகாரம்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி வருகிறார். இவரது இந்த கருத்துக்கள் தமிழக அரசியலில் கடும் புயலை கிளப்பியுள்ளது. இதற்கு பல்வேறு கட்சி தலைவர்களும் சீமானுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதோடு சீமான் வீட்டை முற்றுகையிடும் போராட்டம் எல்லாம் திராவிட இயக்கங்களாலும், பெரியாரிய உணர்வாளர்களாலும் நடத்தப்பட்டது.
அமைதியாக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி
சீமான் - பெரியார் விவகாரத்தில் சீமான் கருத்துக்கு பாஜக மட்டுமே ஆதரவு அளித்து வருகிறது. பெரியார் குறித்து சீமான் பேசியது எல்லாம் உண்மை தான் என்று ஹெச்.ராஜா, அண்ணாமலை, வானதி சீனிவாசன், தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட தலைவர்கள் கூறி வருகின்றனர். ஆனால், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்காமல் அமைதியாக இருப்பது சீமானுக்கு ஆதரவான போக்கு என்று அரசியல் விமர்சகர்கள் கருத்துகின்றனர். இதில் 2026 சட்டமன்ற தேர்தலுக்காண கூட்டணி கணக்கு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
திமுகவை வீழ்த்த வேண்டும்
அதாவது, 2026 சட்டமன்ற தேர்தலில் ஆளும் திமுக அரசை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகளான அதிமுக, பாஜக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் திட்டம் தீட்டி வருகின்றன. இச்சூழலில் தான், பெரியார் குறித்த விமர்சனத்தை தீவிரமாக எடுத்துள்ளார் சீமான். இந்த நேரத்தில் சீமானுக்கு எதிராக பேசினால் அது பாஜக -விற்கு எதிரான நிலைப்பாடாக மாறி பாஜகவுடன் கூட்டணி வைப்பதற்கு சிக்கலாக இருக்கும் எனவே இந்த விவகாரத்தை அமைதியாக கடந்து சென்று விடலாம் என்று எடப்பாடி பழனிச்சாமி நினைப்பதாக கூறப்படுகிறது.