அதிமுகவை அழித்து ஓழித்து விட்டு தமிழகத்தில் பாஜக வளரப்பார்க்கிறது என தான் பேசவில்லை என்று அதிமுக அமைப்புச் செயலாளர் விளக்கமளித்துள்ளார்.


புரட்சித்தலைவி அம்மா பேரவை அணி செயலாளர் ஆர்.பி.உதயகுமார் ஏற்பாட்டில், பேரவை நிர்வாகிகளுக்கு செயல்திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் ராயப்பேட்டை அஇஅதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த பயிற்சி முகாமின் இரண்டாம் நாளான இன்று அஇஅதிமுக மூத்த தலைவரும் அக்கட்சியின் அமைப்பு செயலாளருமான பொன்னையன் கலந்துகொண்டார்.


”தமிழக உரிமைகளுக்கு எதிராக பாஜக”:


அப்போது அவர் பேசுகையில், பாஜக  அதிமுகவின் கூட்டணி கட்சிதான் என்றாலும், அக்கட்சி தமிழகத்தில் வளர்வது அதிமுகவுக்கு- திராவிட கொள்கைகளுக்கு- தமிழக நலனுக்கு நல்லதல்ல என்று கூறிய அவர், தமிழக உரிமைகளுக்கு எதிராக பிஜேபி தொடர்ந்து செயல்படுகிறது என்று குற்றம்சாட்டினார். மேலும் பேசிய அவர் காவிரி நதிநீர் - முல்லை பெரியாறு விவகாரத்தில்  தமிழக பாஜக இரட்டை வேடம் போடுகிறது. கர்நாடக பாஜக தமிழ்நாட்டிற்கு காவிரி நீரை கொடுக்கக்கூடாது என போராடுகிறது. ஆனால் தமிழக பாஜக வாய்மூடி மவுனம் காக்கிறது என்று குற்றம்சாட்டினார். இதனை எல்லாம் அதிமுகவின் ஐ.டி அணியினர் சமூக ஊடகங்களில் அம்பலப்படுத்த வேண்டும் என்று பொன்னையன் அதிமுகவினரிடம் வலியுறுத்தினார்.




தன் பேச்சுக்கு மறுப்பு:


மேலும், அதிமுகவை அழித்து ஒழித்து விட்டு தமிழகத்தில் பாஜக வளர நினைக்கிறது என்ற அவர் அதிமுகவினர் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று கட்சியினரை வலியுறுத்தினார். பொன்னையனின் இந்த பேச்சு ஊடகங்களில் வெளியாகியிருந்தது. இது குறித்த மேலும் விவரங்களுக்கு பொன்னையனை தொடர்புகொண்டு பேசியபோது, அதிமுகவை அழித்துவிட்டு இங்கு பாஜக வளரப்பார்க்கிறது என்றெல்லாம் நான் பேசவில்லை என்று மறுப்பு தெரிவித்தார்.


மேலும், திமுகவிற்கு அடுத்த பெரிய கட்சி, எதிர்க்கட்சி பாஜக என்பதுபோன்ற பிம்பத்தை பாரதிய ஜனதா கட்சியினர் சமூக வலைதளங்களில் பரப்புகின்றனர். அந்த பரப்புரைகளை முறியடித்து, அதிமுகதான் தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சி என்பதை ஐடி விங் அணியினர் நிரூபணம் செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் பாஜக வளரவேண்டுமென்றால், முல்லைபெரியாறு, காவிரி உள்ளிட்ட பிரச்னைகளில் தமிழக மக்களின் நலனுக்கு ஆதரவான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்று பேசியதாக கூறினார்.




”கொள்கையை மாற்றிக்கொள்ள வேண்டும்:”


அதோடு, நீட் பிரச்னையில் தமிழ்நாட்டிற்கு ஆதரவான நிலைபாட்டை பாஜக எடுக்க வேண்டும் ; இந்தி எதிர்ப்பு, ஈழத் தமிழர் பிரச்னையிலும் தமிழக மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து ஆதரவான நிலைப்பாட்டை எடுக்கவேண்டும். அப்படி தமிழ்நாட்டின் நலனுக்காக கொள்கையை மாற்றிக்கொண்டால்தான் இங்கு பாஜகவால் வளரமுடியும் என்று பொன்னையன் கூறினார்.