அதிமுகவின் செயற்குழு கூட்டம் வரும் ஏப்ரல் 7ஆம் தேதி தலைமை அலுவலகத்தில் கூடுகிறது. அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெறும் என பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.  எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக பதிவியேற்ற பின் நடக்கும் முதல் செயற்குழு கூட்டம் இதுவே ஆகும் .  இது குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், 


ஏப்ரல் 7ல் செயற்குழு கூட்டம்


”அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக செயற்குழு கூட்டம் வருகின்ற 7.4.2023 வெள்ளிக் கிழமை பகல் 12 மணிக்கு, சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழகம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், கழக அவைத் தலைவர் டாக்டர் அ. தமிழ்மகன் உசேன் அவர்கள் தலைமையில் நடைபெறும்.


இக்கூட்டத்தில், கழக செயற்குழு உறுப்பினர்களான தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், பிற மாநிலக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் (மகளிர்) அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.


தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் 7.4.2023 அன்று நடைபெறும் என தலைமைக் கழகத்தால் வெளியிடப்பட்ட அறிவிப்பு ரத்து செய்யப்படுகிறது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இரட்டை தலைமை பிரச்சனை


அதிமுகவில் பல மாதங்களாகவே இரட்டை தலைமை பிரச்சனை விஸ்வரூபம் எடுத்து வந்தது. இந்த பிரச்சனையில் ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் வழக்கு தொடர்ந்தனர். முதலில் கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அதேபோல் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களான மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் உள்ளிட்டோர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து ஓபிஎஸ் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. அதில் இந்த பொதுக்குழு செல்லும் என வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது. 


இதனையடுத்து இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் 23 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் தீர்ப்பில் பொதுக்குழு தீர்மானங்கள் குறித்து குறிப்பிடப்படாததால் அதனை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் வழக்கு தொடர்ந்தார். அப்போது அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பு வெளியானது.


இதனை எதிர்த்தும் ஓபிஎஸ் தரப்பிலும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு முக்கியமானதாக பார்க்கப்பட்டது. இந்த வழக்கிலும் இபிஎஸ்க்கு சாதகமாக தீர்ப்பு வந்தது.  இதில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை அறிவிக்க மட்டுமே தடை விதிக்கப்பட்டிருந்ததுடன்,  ஓபிஎஸ் மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த தீர்ப்பு வெளியானதும் அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார்.


இச்சூழலில், அதிமுக செயற்குழு கூட்டம் ஏப்ரல் 7ஆம் தேதி கூடுகிறது. அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெறுகிறது. எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக பதிவியேற்ற பின்னர் நடைபெறும் முதல் செயற்குழு கூட்டம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.