அதிமுகவின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிசாமி நேற்றைய தினம் சென்னையிலிருந்து அவரது சொந்த மாவட்டமான சேலத்திற்கு வருகை தந்தார். சேலம் வந்த எடப்பாடி பழனிசாமிக்கு சேலம் மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட அதிமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் உள்ள அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க பல்வேறு பகுதிகளில் இருந்து அதிமுக நிர்வாகிகள் படையெடுத்து வருகின்றனர். குறிப்பாக புதுக்கோட்டை மாவட்ட செயலாளரும், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சருமான விஜயபாஸ்கர் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் ஆடு, மாடு, கோழி, பழம் வகைகள், காய்கறி வகைகள், கரும்பு, தென்னங்கன்று, டெடி பியர் உள்ளிட்ட 50 வகையான சீர்வரிசை பொருட்களுடன் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். நெடுஞ்சாலை நகர் பிரதான சாலையில் இருந்து ஊர்வலமாக வந்த நிர்வாகிகள் பட்டாசு வெடித்தும் மேளதாளங்கள் முழங்க வந்தது. அப்பகுதியில் விழாக்கோலம் கொண்டது. இதேபோல் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பாலகிருஷ்ண ரெட்டி, கே.சி.கருப்பண்ணன், மோகன், ராமச்சந்திரன், ராஜேந்திர பாலாஜி, உதயகுமார், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆகியோர் தலைமையிலும் ஏராளமான அதிமுகவினர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஒட்டுக் கொத்துக் கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அதிமுக என்ற மாபெரும் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றதையடுத்து கழகம் ஒரு எழுச்சி ஏற்பட்டுள்ளது. இனி முழுவேகத்தோடும் முழுமையான வலிமையோடு அதிமுக மிளிரும். கூட்டணி குறித்து பாஜக தேசிய தலைவர்களும் அதிமுக பொதுச் செயலாளர் தெளிவுபடுத்திவிட்ட பிறகு இது போன்ற கருத்து (அண்ணாமலை கருத்து) தொடர்பான கேள்விகள் தேவையில்லை என்று கூறினார். மத்திய சுகாதாரத்துறையிடமிருந்து வரபெற்ற தகவலை அடுத்து சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் அதிமுக சார்பில் கொண்டுவரப்பட்டுள்ளது. அரசு கொரோனாவை எச்சரிக்கைநோடு எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். மத்திய அரசு எப்போதுமே மருந்துகளை கொடுக்காது மாநில அரசு தான் வாங்க வேண்டும் என்றார்.
அவரைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் உதயகுமார், ”கிளைக் கழக செயலாளராக கட்சியில் இணைந்து தற்போது ஒன்றை கோடி தொண்டர்களால் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தொண்டர்களில் முகமாக எடப்பாடி பழனிசாமி திகழ்கிறார். சுனாமி அலையில் சிக்கி தவித்த அதிமுகவை ஆலமரமாய் இருந்து பாதுகாத்து வருகிறார். கட்சியை துரோகத்தில் இருந்து காப்பாற்றி கலங்கரை விளக்கமாக திகழ்கிறார். அதிமுக அரசின் சாதனைகள் மக்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவு பெற்றிருந்தன. மீண்டும் தமிழகத்தில் நல்லாட்சி மலர சபதம் ஏற்போம். இன்றும் ஒரு நல்ல தீர்ப்பு வந்துள்ளது. எடப்பாடி பழனிசாமி இல்லையென்றால் இயக்கத்தை துரோகிகளிடம் அடமானம் வைத்து சென்றிருப்பார்கள். இயக்கத்தை ஸ்டாலின் காலடியில் அடகு வைத்திருப்பார்கள். அதிமுகவின் ஒரே நம்பிக்கை எதிர்காலம் எடப்பாடி பழனிச்சாமி. தொண்டர்களின் ஒட்டுமொத்த நம்பிக்கையை பெற்றுள்ளார் எடப்பாடி பழனிசாமி. இதை புரிந்து கொள்ளாமல் தெரிந்தும் தெரியாமல் போல் உள்ளனர். தூங்குவதை போல் சிலர் நடிக்கின்றனர்” என்று கூறினார்.