EPS PM Modi: பிரதமர் மோடியிடம் தமிழக மக்களின் நலனுக்காக 3 கோரிக்கைகள் அடங்கிய மனுவை எடப்பாடி பழனிசாமி வழங்கியுள்ளார்.

பிரதமர் மோடி - எடப்பாடி சந்திப்பு:

இங்கிலாந்து மற்றும் மாலத்தீவு ஆகிய வெளிநாடுகளுக்கான சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு, பிரதமர் மோடி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நேற்று தமிழகம் வந்தடைந்தார். தூத்துக்குடியில் நடந்த அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு, திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு வருகை தந்தார். இதையடுத்து, பாஜக உடனான கூட்டணி உறுதியான பிறகு முதல்முறையாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடி இடையேயான சந்திப்பு நடைபெற்றது. அப்போது தமிழக மக்களின் நலன தொடர்பான 3 கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கியதோடு, கூட்டணி தொடர்பான சில விஷயங்களையும் எடப்பாடி பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

3 கோரிக்கைகளை முன்வைத்த எடப்பாடி:

பிரதமர் மோடியிடம் வழங்கிய கோரிக்கை மனுவில்,

  • விவசாய கடன் வழங்குவதற்கு சிபில் ஸ்கோர் கேட்பதில் இருந்து வங்கிகள் விவசாயிகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும்
  • கோதாவரி - காவிரி இணைப்பு திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்து உடனடியாக நிறைவேற்ற வேண்டும்
  • தமிழ்நாட்டில் ராணுவ தளவாட உற்பத்திக்கு வழிவகுக்கும் பிரத்யேக ராணுவ வழித்தடம் ஒன்றை சென்னை,கோவை ஓசூர், சேலம், திருச்சியை இணைத்து செயல்படுத்த வேண்டும்.

என விவசாயிகள் மற்றும் தொழில்துறை சார்ந்த கோரிக்கைகளை எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். மனுவை பெற்றுக் கொண்ட பிரதமர் மோடி, அவற்றை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.

அண்ணாமலை மீது புகாரா?

பிரதமர் மோடியுடனான இந்த சிறிய சந்திப்பில், கூட்டணி தொடர்பான அரசியல் விவகாரங்களும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. அதன்படி வெளியாகியுள்ள தகவலின்படி, கூட்டணி ஆட்சி குறித்தும், முதலமைச்சர் வேட்பாளர் குறித்தும் அதிமுகவின் நிலைப்பாட்டிற்கு எதிராகவும், குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாகவும் பாஜகவினர் முரணாக பேசி வருவதை நிறுத்த வேண்டும் என எடப்பாடி கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது. NDA கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி தான் என்பதை, பாஜக தலைமை அழுத்தம் திருத்தமாக குறிப்பிட்டு இதுதொடர்பான சர்ச்சைகளுக்கு முடிவுகட்ட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளாராம். இதுபோக, கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக அண்ணாமலை செயல்பாடுவதாகவும், தனது அதிருப்தியை, பிரதமர் மோடியிடம் எடப்பாடி வெளிப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

கூட்டணி சுமூகமாகுமா?

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ளன. அதற்கு தயாராவதற்கான பணிகளை அரசியல் கட்சிகள் முடுக்கிவிட்டுள்ளன.திமுக தலைமையிலான கூட்டணியை எதிர்கொள்ள, அதிமுக மற்றும் பாஜக சேர்ந்து வலுவான கூட்டணியை அமைக்க முயற்சித்து வருகின்றன. ஆனால் மற்ற எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதற்கு முன்பாக, ஆட்சியில் அதிகாரம், முதலமைச்சர் வேட்பாளர் போன்ற விவகாரங்களில் அதிமுக மற்றும் பாஜக இடையே இருவேறு கருத்து நிலவுகிறது. இந்நிலையில், தான் பிரதமர் மோடியை எடப்பாடி சந்தித்துள்ளார். இதன் மூலம் கூட்டணி சுமூக நிலையை எட்டுமா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். அதுபோக பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளை கூட்டணியில் இணைப்பது குறித்தும், பிரதமர் மோடி, எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் சந்திப்பில் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.