நமது அம்மா நாளிதழின் முன்னாள் ஆசிரியரும், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளருமான மருது அழகுராஜ் தற்போது ஒட்டுமொத்தமாக அரசியலில் இருந்து விலகுவதாக தனது பேஸ்புக்கில் தகவல் தெரிவித்துள்ளார். 


இதுகுறித்து அவர் தனது பேஸ்புக்கில், “ எழுத்து பேச்சு உள்ளிட்ட அரசியல் நடவடிக்கைகளில் இருந்து முற்றிலும் என்னை விடுவித்து கொள்கிறேன்..
இது காலம் வரை முதுகு தட்டிக் கொடுத்தவர்களுக்கு நன்றி.. என் கருத்துக்களால் யாரேனும் காயப்பட்டிருந்தால் அதற்காக வருந்துகிறேன்..
அன்புடன்
மருது.அழகுராஜ்.. “ என பதிவிட்டுள்ளார். 



முன்னதாக, கடந்த ஜூலை 29 ம் தேதி மருது அழகுராஜ் ’நமது அம்மா’ பத்திரிக்கை ஆசிரியர் பதவியிலிருந்து விலகினார். நமது அம்மா பத்திரிக்கை தொடங்கியலிருந்து இருந்து ஆசிரியராக மருதுராஜ் செயல்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடாக இருந்த நமது எம்ஜிஆர் மற்றும் ஜெயா டிவி சசிகலா தரப்பிற்கு சென்றது. இதையடுத்து கடந்த 2018ம் ஆண்டு நமது அம்மா மற்றும் நியூஸ் ஜெ தொலைக்காட்சியை அ.தி.மு.க. நிர்வாகிகள் தொடங்கினர். நமது அம்மா நாளிதழ் நிறுவனர்களாக ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி பெயர் அறிவிக்கப்பட்டது. 


ஒற்றை தலைமை விவகாரத்திற்கு பிறகு நமது அம்மா நாளிதழ் நிறுவனர் பெயரில் இருந்து ஓ.பன்னீர் செல்வம் பெயர் நீக்கப்பட்டது. இதனால் அதிருப்தியடைந்த நமது அம்மா நாளிதழ் ஆசிரியராக இருந்த மருது அழகுராஜ் விலகினார். தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வத்திற்கு தனது ஆதரவையும் தெரிவித்து வந்தார். 


நமது அம்மா நாளிதழ் ஆசிரியர் பதவியிலிருந்து விலகும்போது அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “நதிகாக்கும் இரு கரைகள் என்னும் என் போன்றோரது நம்பிக்கை, சுயநலத்தால் தகர்ந்து விட்ட நிலையில் நமது அம்மா நாளிதழ் ஆசிரியர் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்கிறேன்" என கூறியிருந்தார்.


கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் இ.பி.எஸ். விரைவில் சிறைக்கு செல்வார் என்றும், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தனிப்படை காவல்துறையிடம் ஆஜராகி பல ரகசிய தகவல்களை மருது அழகுராஜ் தெரிவித்தார். இந்தநிலையில் திடீரென மருது அழகுராஜ் அரசியலில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். 


விலகும்போது தனது பேஸ்புக்கில், “ என் கருத்துக்களால் யாரேனும் காயப்பட்டிருந்தால் அதற்காக வருந்துகிறேன்” என தெரிவித்துள்ளது எடப்பாடி பழனிசாமியை தான் குறிப்பிட்டு மருது அழகுராஜ் கூறியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.