TTV Dhinakaran: ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையா? அரசியல்வாதி தயாரித்த அறிக்கையா என அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கேள்வி எழுப்பியிருந்தார்.
தஞ்சாவூர்: அரசியல்வாதி தயாரித்தது போன்று உள்ளது ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை. உண்மை என்ன என்பது தமிழக மக்களுக்குத் தெரியும். என்று அமமுக பொதுச் செயலர் டி.டி.வி. தினகரன் காட்டமாக தெரிவித்தார்.
தஞ்சாவூரில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, ”சட்டப்பேரவையில் எதையும் முடிவு செய்கிற அதிகாரம் பேரவைத் தலைவருக்குத்தான் உள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். மக்கள் பிரச்னை எவ்வளவோ இருக்கும் நிலையில், நாற்காலிக்காக போராட்டம் நடத்துவது வருத்தமளிக்கிறது.
தூத்துக்குடி சம்பவம் நிகழ்ந்தபோது எடப்பாடி பழனிசாமிதான் முதலமைச்சராக இருந்தார். நிச்சயமாக அவர் மீது தான் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும். இதற்கு காரணமானவர்கள் முதலமைச்சராக இருந்தாலும், நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்தனர். நீதிபதியின் அறிக்கையும் அதைத்தான் சொல்வதால், தமிழக அரசும் சரியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்தார்.
"ஜெயலலிதாவின் மரணம் இயற்கையானதுதான் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை அரசியல்வாதி தயாரித்த அறிக்கை போல உள்ளது. உண்மை என்ன என்பது தமிழக மக்களுக்குத் தெரியும். இந்த அறிக்கையைத் தமிழ்நாடு அரசு என்ன செய்யப் போகிறது என்பதைப் பார்ப்போம். அரசியல் ரீதியாகத்தான் இந்த ஆணையமே அமைக்கப்பட்டது” என டிடிவி தினகரன் தெரிவித்தார்
"இந்த அறிக்கையை எதிர்த்து பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்துக்கு நிச்சயமாகச் செல்வர். நீதிமன்றத்தில் இந்த ஆணைய அறிக்கை கண்டனத்துக்கு உள்ளாகலாம். மருத்துவர்கள் அந்த நேரத்தில் எது சரியானதோ, அதைச் செய்கின்றனர். ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மிகப் பெரிய வல்லுநர்கள். அவர்களை எல்லாம் அவமதிக்கும் வகையில் இந்த அறிக்கை உள்ளது. இதை சிபிஐ விசாரணை நடத்தினால், இந்த அறிக்கை ஏன் தவறுதலாக வந்தது என்ற உண்மை வெளிப்படும்” என அவர் தெரிவித்தார்.
தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா 2016ஆம் ஆண்டு உடல் நலக் குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, நீண்ட சிகிச்சைக்குப் பிறகும் உயிரிந்தார். இந்த மரணத்தில் மர்மம் இருந்ததாக அப்போதைய முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டிய நிலையில், இது தொடர்பாக விசாரிப்பதற்காக 2017ம் ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதி ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டது.
இந்த ஆணையம் சுமார் நான்கரை ஆண்டுகால விசாரணைக்குப் பிறகு தனது அறிக்கையை இந்த ஆண்டு ஆகஸ்ட் 27ம் தேதி முதலமைச்சரிடம் சமர்ப்பித்தது. அந்த அறிக்கை தமிழ்நாடு சட்டப்பேரவையில் அக்டோபர் 18ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையில் ஜெயலலிதாவின் மரணம் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தது. ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ அல்லது இதய அறுவை சிகிச்சை செய்ய அமெரிக்க மருத்துவர் உள்பட பல மருத்துவர்கள் பரிந்துரைத்தும் அது வழங்கப்படாதது ஏன் என ஆணையம் கேள்வி எழுப்பியிருக்கிறது.
சிகிச்சையை மாற்றுவதற்கான உரிமை அமெரிக்க மருத்துவர் தவிர சசிகலாவுக்கும் இருந்தது. நெருக்கடியின் போது முடிவெடுக்கும் திறன் பெற்றவர்கள், கார்டியோ தொராசிக் அறுவை சிகிச்சையை தொடராமல் தவறிழைத்திருக்கலாம். அந்த அறுவை சிகிச்சை மறைந்த முதல்வரின் உயிரை காப்பாற்றும் விளைவை ஏற்படுத்தி இருக்கலாம் என அறிக்கை கூறுகிறது.
மேலும், அவருக்கு வெளிநாட்டில் சிகிச்சை அளிக்கப்படாதது ஏன் எனக் கேள்வியெழுப்பியருக்கும் ஆணையம், ஜெயலலிதாவின் தோழி வி.கே. சசிகலா, அவரது உறவினர் டாக்டர் சிவகுமார், அப்போதைய சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறைச் செயலர் ஜெ. ராதாகிருஷ்ணன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.