அதிமுக அடையாளங்களை சட்டமன்ற எதிர்கட்சித் துணைத் தலைவர் ஓ. பன்னீர் செல்வம் பயன்படுத்தக்கூடாது என அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தொடுத்த வழக்கின் விசாரணை ஜனவரி மாதத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. உயர்நீதிமன்றத்தில் ஓ.பன்னீர் செல்வம் தரப்பில், நீதிமன்றம் ஏற்கனவே விதித்த அதிமுக அடையாளங்களை பயன்படுத்தக்கூடாது என்ற உத்தரவை மீறவில்லை என விளக்கம் கொடுத்த பின்னர் தீர்ப்பு ஜனவரிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 


தமிழ்நாட்டின் தற்போதைய பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவின் அரசியல் சலசலப்பு இன்று வரை முடிவுக்கு வந்தவண்ணம் இல்லை. அதிமுகவின் பொதுச் செயலாளராக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட அதே பொதுக்குழுவில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது சகாக்களை அதிரடியாக கட்சியில் இருந்து நீக்கினார். அதன் பின்னர் அதிமுகவினை கைப்பற்ற ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் எடுக்கப்பட்ட  முயற்சிகள் அனைத்தும் ஒவ்வொன்றாக பழனிசாமி தரப்பு முறியடிக்க, கட்சி முழுவதும் பழனிசாமி கைவசம் வந்தது. 


இதையடுத்து பன்னீர் செல்வம் தரப்பில் கட்சியில் இணைய வேண்டும் என சட்டப்போரட்டம் நடத்தத் தொடங்கினர். ஆனால் இது அனைத்தும் ஒவ்வொன்றாக பழனிசாமி தரப்பு எதிர்கொண்டது மட்டும் இல்லாமல் தற்போது பன்னீர் செல்வம் மற்றும் அவரது சகாக்கள் அதிமுக பெயர், கொடி, சின்னம், மற்றும் லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்தக்கூடாது என நீதிமன்றத்தில் முறையிட்டு வெற்றியும் கண்டார்கள். அதன் பின்னர் பன்னீர் செல்வம் அதிமுக அடையாளங்களைத் துறந்து பொதுவெளியில் காணப்படுகின்றார். 


இந்நிலையிலும் பன்னீர் செல்வம் தரப்பு அதிமுகவில் இணைய சட்டப்போராட்டத்தினை நடத்தி வருகின்றனர். ஆனால் இதையெல்லாம் லெஃப்ட் கேண்டில் டீல் செய்யும் அளவிற்கு அதிமுக முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் இன்னாள் மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் எடப்பாடி பழனிசாமிக்கு வளைந்து கொடுத்து போவதால் எடப்பாடியின் அரசியல் கட்சிக்குள் வெற்றிமுகமாக உள்ளது. இதனால் தான் பன்னீர் செல்வத்தை நீக்கி விட்டதால் தென் தமிழ்நாட்டில் வாக்குகளை இனி அதிமுக பெறுவது கஷ்டம் என பேசப்பட்டது. இதற்கெல்லாம் பதில் அளிக்கும் வகையில் மதுரையில் மாநாட்டினை தனது தலைமையில் நடத்தினார் எடப்பாடி பழனிசாமி. 


கட்சியின் அடையாளங்களை பன்னீர் செல்வம் பயன்படுத்தக்கூடாது என நீதிமன்றம்  இடைக்கால உத்தரவிட்டதை எதிர்த்து, மேல் முறையீடு செய்தார் பன்னீர் செல்வம். இந்த மேல்முறையீட்டு மனுவினை சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.  இதையடுத்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவினை விசாரித்த நீதிபதி, பன்னீர் செல்வம் தரப்பில்  மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கின் நிலை என்ன என கேட்டார் நீதிபதி சதீஷ்குமார். 


பன்னீர் செல்வம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வி.ஹெச் அரவிந்த் பாண்டியன், “ மேல் முறையீட்டு மனுவின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தீர்ப்பு வரும் வரை இந்த வழக்கை ஒத்தி வைக்கலாம்” என பதில் அளிக்கப்பட்டது. இதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞரான விஜய நாராயணன், தீர்ப்பு வரும் வரை காத்திருக்காமல், இந்த வழக்கில் பதில் மனுத்தாக்கல் செய்து வாதத்தை தொடங்கலாம் எனவும், இந்த வழக்கை ஒத்திவைப்பதாக இருந்தால் பன்னீர் செல்வத்திற்கு இடைக்காலத் தடையை நீட்டிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார். 


இதனை ஏற்றுக்கொண்ட பன்னீர் செல்வம் தரப்பு வழக்கறிஞர், ” வழக்கின் மறு உத்தரவு வரும் வரை அதிமுகவின் பெயர், கொடி, சின்னம் மற்றும் லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த மாட்டோம்” என உத்திரவாதம் அளித்தார். உத்தரவாதம் அளித்த நிலையில் வழக்கின் விசாரணையை வரும் டிசம்பர் 11ஆம் தேதிக்கு அதாவது இன்று நீதிமன்றம் ஒத்திவைத்தது. இன்று வழக்கு விசாரணை செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வழக்கு விசாரணை ஜனவரிக்கு ஒத்திவைக்கப்படுள்ளது.