தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில் 1990 முதல் 2000 காலக்கட்டம் வரை முன்னணி நடிகயாக வலம் வந்தவர் ரோஜா. தமிழில் செம்பருத்தி எனும் படம் மூலம் அறிமுகமான இவர் முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். ஆரம்பத்தில் நடிக்க மட்டும் செய்த இவர், 1999ஆம் ஆண்டில் தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தார். அதன் பிறகு, 10 வருடங்கள் கழித்து 2009ஆம் ஆண்டில் ஜெகன் மோகன் ரெட்டியின் YSR காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
நடிப்பு, அரசியல் என்றிருந்த ரோஜா அதையும் தாண்டி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பல நிகழ்சிகளுக்கு தொகுப்பாளராகவும் இருந்துள்ளார். குறிப்பாக, தமிழில் ஒளிபரப்பான லக்கா கிக்கா நிகழ்ச்சி மிகப்பெரிய ஹிட் அடித்தது. ரோஜா, தற்போது ஆந்திராவின் சுற்றுலாத் துறை அமைச்சராக உள்ளார். இவர் செய்த ஒரு காரியம், தற்போது சமூக வலைதளத்தில் சர்ச்சைக்குரிய பேசு பொருளாக மாறியுள்ளது.
உதவியாளரை செருப்பு தூக்க வைத்த ரோஜா:
ஆந்திராவின் சுற்றுலாத்துறை அமைச்சராக இருக்கும் ரோஜா மாநிலத்தின் சுற்றுலாவை வளர்க்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், ஆந்திராவில் உள்ள சூர்யலங்கா கடற்கரைப் பகுதிக்கு அமைச்சர் ரோஜா நேற்று சென்றிருந்தார். அப்போது அவர், கடற்கரையிலும் கடல் அலையிலும் நடந்து சென்றார். அப்போது, அவரது காலணிகள் அவர் அருகே நின்றிருந்த உதவியாளரின் கையில் இருந்தன. ரோஜாவின் கடற்கரை விசிட் வீடியோ வெளியான போது, அவரது காலணிகள் உதவியாளரின் கையில் இருந்ததையும் பலர் கவனிக்க தவறவில்லை.
நெட்டிசன்களின் பிடியில் ரோஜா:
ஆந்திர அமைச்சர் ரோஜாவின் கடற்கரை வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, ரோஜாவின் காலணி விஷயம் இணையவாசிகளிடையே வேகமாகப் பரவத் தொடங்கியது. சிலர், ட்விட்டர் மற்றும் இதர சமூக வலைதளங்களில், “இதெல்லாம் ஒரு அமைச்சர் செய்யும் செயலா?” என்று காட்டமாக கேள்வியெழுப்பி வருகின்றனர். இன்னும் சிலர், “அமைச்சரவையில் இருக்கும் ஒருவர் இப்படி ஒருவரை இழிவாக நடத்தலாமா?” எனவும் தங்களது கண்டனங்களை பதிவிட்ட வண்ணம் உள்ளனர். ஆனால், இந்த விஷயம் குறித்து நடிகை ரோஜாவின் தரப்பில் இருந்தோ, அரசின் தரப்பில் இருந்தோ இன்னும் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.
சுற்றுலாவை வளர்க்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ள ரோஜா:
சூர்யலங்கா பகுதியில் உள்ள கடற்கரையை பார்வையிட்ட நடிகை ரோஜா, அந்த கடற்கரையை விரிவாக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும், சுற்றுலாப் பயணிகள் லங்கா கடற்கரையை தவறாமல் சுற்றிப்பார்க்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். தற்போது ஆந்திராவின் லங்கா பகுதியில் சுற்றுலாப் பகுதிகளை பார்வையிட்ட ரோஜா, இன்னும் சில இடங்களையும் பார்வையிட உள்ளார். லங்கா பகுதியில் உள்ள சுற்றுலா தளங்களை சுற்றிப்பார்த்த பிறகு, தனது துறை சார்ந்த முக்கிய அதிகாரிகளுடன் நடிகை ரோஜா ஆலோசனைக் கூட்டம் நடத்தவுள்ளதாக முன்னர் கூறியிருந்தார்.