மகாராஷ்டிராவின் முன்னாள் அமைச்சர் ஆதித்யா தாக்கரே. இவர், சிவசேனா கட்சியை நிறுவிய பால் தாக்கரேவின் பேரன். மகாராஷ்டிராவில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா கட்சிகள் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைத்தபோது, உயர்கல்வி, சுற்றுலா மற்றும் வனத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார்.


தற்போது, சென்னைக்கு வந்துள்ள ஆதித்யா தாக்கரே, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசியுள்ளார். அப்போது, தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, திமுக செய்தித் தொடர்புத்துறை தலைவரும் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான டி.கே.எஸ் இளங்கோவன் உடனிருந்தனர்.




மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ். பன்னீர்செல்வம் எழுதிய Karunanidhi: a life (முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்று) புத்தகத்தை ஆதித்யா தாக்கரேவுக்கு ஸ்டாலின் பரிசாக அளித்தார்.


இதையடுத்து, கருணாநிதியும் பால் தாக்கரேவும் சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்படத்தை ஸ்டாலினுக்கு ஆதித்யா தாக்கரே பரிசாக அளித்தார்.


இந்த சந்திப்பு, எத்ற்கான நடந்தது என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை. ஆனால், வரும் 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. குறிப்பாக, மகாராஷ்டிராவும் தமிழ்நாடும் அதிக மக்களவை தொகுதிகளை கொண்ட மாநிலங்கள்.


உத்தரப் பிரதேசத்திற்கு அடுத்தப்படியாக மகாராஷ்டிராவில் 48 மக்களவை தொகுதிகள் உள்ளன. அதேபோல, தமிழ்நாடு 39 மக்களவை உறுப்பினர்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்புகிறது. எனவே, இரண்டு மாநிலங்களுக்கும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலங்களாக திகழ்கிறது.


தேசிய அளவில் பாஜகவுக்கு எதிரான கூட்டணியை அமைக்க பல்வேறு கட்சிகள் முயன்று வரும் நிலையில், இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. மகாராஷ்டிராவில் பாஜகவின் உதவியுடன் சிவசேனாவின் மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே, சொந்த கட்சியை இரண்டாக உடைத்து முதலமைச்சராக ஆகியுள்ளார்.


தற்போது, மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவும் பாஜகவும் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைத்துள்ளது. துணை முதலமைச்சராக பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் உள்ளார். சிவசேனாவை இரண்டாக உடைத்ததால் பாஜகவின் மீது உத்தவ் தாக்கரே குடும்பம் கோபமாக உள்ளது.


 






இதன் காரணமாக, பாஜகவுக்கு எதிரான கூட்டணியை வலுப்படுத்த உத்தவ் தாக்கரே முயற்சி செய்து வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.


தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா ஆகியோர் ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.