பாஜகவில் இருந்து விலகிய நடிகை காயத்ரி ரகுராம் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாளவனை சந்தித்தது தமிழ்நாடு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை விமர்சித்துவந்த காயத்ரி ரகுராம், கட்சியில் இருந்து 6 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்படுவதாக பாஜக தலைமை அறிவித்தது. அதன் பின்னர் சில மாதங்கள் கழித்து தனது ராஜினாமா கடிதத்தை காயத்ரி ரகுராம் கொடுத்ததையடுத்து பாஜகவினர் ஏற்றுக்கொண்டது. பாஜகவில் இருந்து முழுமையாக விலகிய காயத்ரி ரகுராம் விசிக தலைவர் திருமாவளவனை ஆதரித்து கடந்த சில மாதங்களாக பேசி வந்தார். விசிகவில் சேரப்போகிறீர்களா என்று பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியபோது, மக்களுக்கு சேவை செய்வதற்காக எங்கு வேண்டுமானாலும் சேரலாம் என்று சொல்லியிருந்தார்.


மேலும், ‘இனிமேல் பாஜகவில் நான் சேரமாட்டேன். எந்த கட்சி அழைத்தாலும் அதில் இணைந்து மக்கள் பணியாற்றுவேன். என்னை அழைத்தால் திமுக அல்லது விசிகவில் இணைய தயார்’  என்று கூறியிருந்தார்.


இந்தநிலையில் நடிகை காயத்ரி ரகுராம் விசிக தலைவர் திருமாவளவனை சந்தித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை காயத்ரி ரகுராம் சந்தித்துள்ள புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது. தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட நடிகை காயத்ரி ரகுராம், “எதிர்பாராத மனிதர்கள் எனக்கு உதவியபோது 🙏
வி.சி.க. தலைவர், எம்.பி., அண்ணா திரு.தொல் திருமாவளவன் அவர்களுக்கும், வி.சி.க.வுக்கும் எனது நன்றிகள். ஆதரவு அளித்ததற்கு நன்றி. மரியாதை நிமித்தமான அற்புதமான சந்திப்பு” என பதிவிட்டு இருந்தார். 






முன்னதாக, திருமாவளவனை கடுமையாக விமர்சித்து வந்தார் காயத்ரி ரகுராம். பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அவர்,  “என்ன மிஸ்டர் திருமாவளவன்.. என்ன நினைச்சுட்ருக்கீங்க.. தமிழ்ப்பெண்கள் எல்லாம் நீங்க சொல்றதுக்குலாம் தலையை ஆட்டிருப்போம்னு நினைச்சிட்ருக்கீங்களா.. இந்துவா இருந்துகிட்டு நீங்க செய்ற துரோகத்தை மன்னிச்சு விடவே மாட்டோம்.. ஒன்னு மட்டும் புரிஞ்சிக்குங்க.. இனி உங்களோட பேட் டைம் ஸ்டார்ட்ஸ்..” என்று பேசியிருந்தார்...


என்ன மிஸ்டர் திருமாவளவனில் இருந்து... அண்ணன் திருமாவளவன் என்ற நிலைப்பாட்டிற்கு காயத்ரி ரகுராம் மாறியதற்கு பலர் வரவேற்பு தெரிவித்தும், பாஜகவினர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். மேலும், காயத்ரி ரகுராம் விசிகவில் இணைவதை இந்த சந்திப்பு உறுதிப்படுத்தியுள்ளதா என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.