தமிழக பாரதிய ஜனதா கட்சியின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவர் காயத்ரி ரகுராம் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களிலும் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதால், கட்சியில் அவர் வகித்து வரும் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ஆறு மாத காலத்திற்கு நீக்ககுவதாக, பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டார். தன்னிடம் விளக்கம் கேட்காமலேயே கட்சி தலைமை நடவடிக்கை எடுத்து இருப்பதாக, காயத்ரி ரகுராம் வேதனை தெரிவித்து இருந்தார்.


”காயத்ரி ரகுராமுக்கு திமுக உடன் தொடர்பு”:


காயத்ரி ரகுராம் நீக்கம் பாஜகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், அதுகுறித்து அக்கட்சியின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவின் தலைவர் அமர்பிரசாத் ரெட்டி விளக்கமளித்துள்ளார்.


இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 3 மாதங்களுக்கு முன்பாக சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள சோமர்ஷெட் ஓட்டலில், முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான ஸ்டாலினின் மருமகனான சபரீசனை, காயத்ரி ரகுராம் சந்தித்து 1 மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்தியதாக குறிப்பிட்டுள்ளார். துரோகிகளுக்கு பா.ஜ.க.வில் இடம் இல்லை எனவும், காயத்ரி ரகுராமின் பெயரை குறிப்பிடாமால் மறைமுகமாக குற்றம்சாட்டி அமர் பிரசாத் ரெட்டி பதிவிட்டுள்ளார்.




                                             காயத்ரி ரகுராம் நீக்கிய டிவிட்டர் பதிவு


டிவீட்டை டெலிட் செய்த காயத்ரி ரகுராம்:


அமர் பிரசாத்தின் குற்றச்சாட்டுக்கு டிவிட்டரில் பதிலளித்த காயத்ரி ரகுராம், ஏய் முட்டாள் தன்னுடைய நண்பரின் பிறந்தநாள் விழாவிற்கு சென்றபோது, எதிர்பாராத விதமாக சபரீசனை சந்தித்ததாகவும், சபை நாகரீகத்தின் அடிப்படையிலேயே தான் பேசியதாகவும் பதிவிட்டிருந்தார். பார்த்தும் பார்க்காதபடி இருப்பது சிறுபிள்ளைதனம் எனவும், அதுபோல் தன்னால் செயல்பட முடியாது என்றும் பதிவிட்டிருந்தார். ஆனால் சிறிது நேரத்திற்குள் அந்த பதிவை காயத்ரி ரகுராம் டிவிட்டரில் இருந்து நீக்கி விட்டார்.






பிராடுகளுக்கு பதிலளிக்க முடியாது:


புதிய பதிவு ஒன்றை வெளியிட்ட காயத்ரி ரகுராம், முட்டாள்களுக்கு எல்லாம் தான் பதிலளிப்பதில்லை என குறிப்பிட்டு உள்ளார். தொடர்ந்து, முட்டாள்கள் விளக்கம் அளிக்க அவர்கள் தகுதியற்றவர்கள் எனவும் பதிவிட்டுள்ளார். தூய்மையாக இல்லாத அவர்கள், எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முடிந்ததை அவர்கள் செய்யலாம், அவர்கள் தெரிவிக்கும் கருத்துகள் மூலமாகவே அவர்களது நிலை அம்பலமாகிறது எனவும், காயத்ரி ரகுராம் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.