கோட் படப்பிடிப்பு தளத்தில் நடிகரும், அரசியல் கட்சித் தலைவருமான விஜய்க்கு ஆரவாரம் எழுப்பி ரசிகர்கள் வரவேற்பு தந்த புகைப்படங்கள், வீடியோ வெளியாகியுள்ளது.


அரசியல் வருகைக்கு இடையே படப்பிடிப்பு


வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து திரைப்படம் கோட் (GOAT - Greatest Of All Time). இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது. இதனிடையே விஜய் நேற்று முன் தினம் தன் அரசியல் எண்ட்ரி பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டதுடன்,  தமிழக வெற்றி கழகம்” என கட்சியின் பெயரையும் பதிவு செய்து அறிவித்தார்.


இதனைத் தொடர்ந்து விஜய்யின் அரசியல் வருகை தமிழ்நாடு தாண்டி பேசுபொருளாகியுள்ள நிலையில், அரசியல் தலைவர்கள், சினிமா வட்டாரத்தினர், ரசிகர்கள் என பலரும் வாழ்த்தையும் விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றனர்.


புதுச்சேரியில் சூழ்ந்த ரசிகர்கள்


இந்நிலையில் புதுச்சேரியில் கோட் படப்பிடிப்புத் தளத்தில் விஜய் தன் ரசிகர்களை சந்தித்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. புதுச்சேரி, முதலியார் பேட்டை ஏஎஃப்டி பஞ்சாலையில் கோட் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், அங்கு அவரது ரசிகர்கள் சூழந்தனர்.


இந்நிலையில் வெள்ளை ஷர்ட் அணிந்து கேரவேன் மேற்கூரையில் ஏறி தன் ரசிகர்களை நோக்கி கையசைத்து அவர்களை உற்சாகப்படுத்தினார் விஜய். தொடர்ந்து அங்கிருந்த ரசிகர்கள் ஆர்ப்பரித்து அவர் மீது பூக்களைத் தூவி வாழ்த்தினர். அரசியல் வருகையை அறிவித்த பின் முதன்முறையாக நடிகர் விஜய் பொதுவெளியில் தோன்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.


ரசிகர்களுடன் செல்ஃபி!


 






இந்நிலையில் “என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்கள்” எனும் கேப்ஷனுடன் இந்த வீடியோவினை விஜய்யின் மேனேஜரும் மாஸ்டர் படத்தின் இணை தயாரிப்பாளருமான ஜெகதீஷ் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் லைக்ஸ் அள்ளி வைரலாகி வருகிறது. 


இந்நிலையில், தமிழ்நாடு வெல்கம்ஸ் டிவிகே விஜய் எனும் ஹேஷ்டேகையும் விஜய்யின் ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். 


தமிழக வெற்றி கழகம்


தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான விஜய்யின் அரசியல் வரவேற்பு எதிர்பார்த்த ஒன்று என்றாலும், இந்த அறிவிப்பு அரசியல், சினிமா தளங்களில் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசியலில் எண்ட்ரி கொடுத்துள்ள விஜய்க்கு தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


வரும் 2024 மக்களவைத் தேர்தலில் தங்கள் கட்சி போட்டியிடப்போவதில்லை எனவும், அதே நேரத்தில் யாருக்கும் தாங்கள் ஆதரவு அளிக்கப் போவதில்லை என்பதையும் விஜய் ஏற்கெனவே தன் அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளார். இந்நிலையில், முன்னதாக “தமிழ்நாட்டு மக்களின் பேரன்போடு தான் முன்னெடுத்துள்ள அரசியல் பயணத்துக்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி” என விஜய் தெரிவித்துள்ளார்.