விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனின் 60வது பிறந்தநாளுக்கு நடிகர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது. 


விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் நேற்று (ஆகஸ்ட் 17) தனது 61வது பிறந்த நாளை கொண்டாடினார். இதனை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி, கனிமொழி எம்.பி., மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், சசிகலா உள்ளிட்ட அரசியல் களத்தைச் சேர்ந்த பலரும் வாழ்த்து தெரிவித்தனர். மேலும் இணையவாசிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்கள் என அனைவரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க சமூக வலைத்தளங்கள் கொண்டாட்டத்தில் ஆழ்ந்தன. 


இப்படியான நிலையில் தொல்.திருமாவளவன் மணிவிழாவை முன்னிட்டு சென்னை அண்ணாசாலையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் இரா.நல்லக்கண்ணு தலைமை தாங்கி  விழா சிறப்பு மலரை வெளியிட்டார். திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி முன்னிலை வகித்து விழா மலரை பெற்றார். மேலும் நடிகர் சத்யராஜ், கவிஞர்கள் அறிவுமதி, பழனி பாரதி, விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளர்கள் சிந்தனை செல்வன், துரை.ரவிக்குமார் ஆகியோர் திருமாவளவனை வாழ்த்தி பேசினர். முடிவில் திருமாவளவன் ஏற்புரை நிகழ்த்தினார். 


தொடர்ந்து திரைப்பட பாடலாசிரியர் கபிலன் தலைமையில் கவியரங்கம் நடைபெற்றது. கவிஞர்கள் தமிழ் மணவாளன், ரவிக்குமார், தனிக்கொடி, தஞ்சை இனியன், தேன் மொழிதாஸ், அருண்பாரதி ஆகியோர் கவிப்பொழிவு நிகழ்த்தினார்கள். வெகுவிமரிசையாக இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இதனிடையே தொல்.திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில் தனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்து பதிவுகளை வெளியிட்டார். 






அப்போது நடிகர் விஜய் தனக்கு தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்ததை அவர் பதிவிட்டதும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது. ஏற்கனவே நடிகர் விஜய் அரசியலுக்கு வரப்போகிறார் என்ற தகவல் மிகத் தீவிரமாக பரவி வருகிறது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் பல்வேறு நலத்திட்டங்கள், உதவிகள், தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது, கல்வியகம், விழியகம் உள்ளிட்ட திட்டங்கள் அவரது மக்கள் இயக்கத்தால் செயல்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.