விடுதலை சிறுத்தை கட்சியின் மாநிலத் துணைப் பொதுச் செயலாளரும், திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.எஸ். பாலாஜி ஏபிபி நாடு செய்தி நிறுவனத்திற்கு அளித்த பிரத்தேக பேட்டி.

 



 

செய்தியாளர்:- சமீபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் திருமாவளவன் வழக்கத்தை விட ஆக்ரோஷமாக பேசியதின் காரணம் என்ன? குறிப்பாக பாரதி ஜனதா கட்சி மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி ஆகிய கட்சிகளுடன் கூட்டணி இல்லை என பேசியது, அதிமுகவிற்கு கூறப்பட்ட செய்தியா அல்லது திமுகவிற்கு கூறப்பட்ட செய்தியா ?

 

 

எஸ்.எஸ்.பாலாஜி எம்எல்ஏ :-  சாதிவாத மற்றும் மதவாத கட்சிகளுடன் எந்த சூழலிலும் கூட்டணி இல்லை என தொடர்ந்து எங்கள் கட்சித் தலைவர் திருமாவளவன் தொடர்ந்து தெரிவித்து வருகிறார். அதன் மீது தான் அரசியல் பயணமே சென்று கொண்டிருக்கிறது. இத்தனை சட்டமன்ற தொகுதிகள் வேண்டும், இத்தனை நாடாளுமன்ற தொகுதிகள் வேண்டும் என்று கூட்டணி அமைக்கப்படவில்லை. இது யாருக்கான சிக்னலும் அல்ல, தொடர்ந்து விடுதலை சிறுத்தை கட்சி கொள்கையின் மீது பயணிக்கிறது என்பதை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தி உள்ளார். சிலரைப் போல் கார் உள்ளவரை, கார்மேகம் உள்ளவரை என பேசிவிட்டு மீண்டும் அவர்களுடனே கூட்டணி வைக்கும் பழக்கம் இல்லை.

 

 

செய்தியாளர் :- திமுக - பாமக கூட்டணி, அதிமுக- பாஜக கூட்டணி அமைந்தால் விசிகவின் நிலைப்பாடு என்ன?

 

எஸ் எஸ் பாலாஜி எம்எல்ஏ :- இது ஒரு யூக கேள்வி. பாஜக மற்றும் பாமக ஒரே அணியில் இருந்தாலும் அந்த அணியில் விசிக இருக்காது. பாமக , பாஜக தனித்தனி அணியில் இருந்தாலும், அந்த இரண்டு அணியிலும் விசிக இருக்காது. ஆனால் இப்படி ஒரு நிலைமை எழாது என்பது என்னுடைய உறுதியான நம்பிக்கை. தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சி மற்றும் கூட்டணி ஆகிய இரண்டையும் சரியாக கொண்டு சென்று கொண்டிருக்கிறார். திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் இருப்பவர்கள் ஒத்த கருத்துடைய கட்சிகளாக இருக்கிறார்கள். விடுதலைச் சிறுத்தை கட்சி எந்த அணியில் இருக்கிறதோ, அந்த அணிதான் உண்மையாக பாஜகவை எதிர்க்கக்கூடிய அணி.

 



 

இது போன்ற யூக கேள்விகள் வருவதற்கு காரணம் பாட்டாளி மக்கள் கட்சி தான். இதற்கு முக்கிய காரணம் பாமக பிழைப்புவாத அரசியலை நம்பி கட்சி நடத்தி வருகின்றனர். சேலம் பகுதியில் பாமக சில எம்எல்ஏக்களை பெற்றுள்ளது. திமுக ஆட்சியில் இருக்கும் போது பாமக அவர்களுடன் கூட்டணி இல்லை , ஏதோ ஒரு வகையில் ஆதாயம் வேண்டும் என்பதற்காக நாங்கள் திமுக கூட்டணியில் இணைய போகிறோம் , எனக்கூறி அரசு அதிகாரிகளை அச்சுறுத்த வேண்டும், அதேபோல் நாங்கள் விரைவில் திமுகவுடன் கூட்டணி வைக்கப் போகிறோம் எனக் கூறினால், அவர்களுக்கு ஏதாவது ஒரு ஆதாயம் கிடைக்கும். என்பதற்காக அவர்களே  கிளப்பி விடுகிறார்கள். அதுபோன்ற எண்ணம் திமுகவிற்கு இல்லை என நம்புகிறேன். எனக்கு இருக்கும் தொடர்பின் அடிப்படையிலும் விசாரித்த பொழுது அதற்கான தேவையும் இல்லை.

 


 

செய்தியாளர்:- ஈரோடு இடைத்தேர்தலில் அதிக அளவு பணம் செலவு செய்யப்பட்டு இந்த வெற்றி பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது ?

 

எஸ் எஸ் பாலாஜி:- பணம் கொடுப்பதாக இரண்டு தரப்பிலும் குற்றச்சாட்டுகள் இருந்தது. அப்படி இருக்கு இதன் அடிப்படையில் , வெற்றி பெற வைத்தார்கள். எனவே மக்களை இதுபோன்று கூறி கொச்சைப்படுத்த வேண்டாம். மக்களை கொச்சைப்படுத்தும் விதமாக தொடர்ச்சியாக பிரச்சாரங்களை மேற்கொள்வது ஆரோக்கியமானது அல்ல.