ADMK vs BJP:  அதிமுக குறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்த நிலையில் அதற்கு அதிமுக தரப்பில் இருந்து பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.


இதனால், அதிமுக பாஜக இடையிலான கூட்டணியில் விரிசல் அதிகமாகியுள்ளதா? எனும் கேள்வி இரு கட்சிகளின் தொண்டர்களுக்கு இடையிலும் எழுந்துள்ளது. சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பாஜகவில் உள்ள இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்ட, நான்காம் கட்ட தலைவர்களை தங்கள் பக்கம் இழுத்து திராவிட கட்சிகளை வளர்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது என கூறீயிருந்தார். 




இதற்கு அதிமுக ஐ.டி விங்கைச் சேர்ந்த சிங்கை ஜி. ராமச்சந்திரன் தனது ட்விட்டர் பக்கத்தில், “ நோட்டாவை விட குறைவாக வாக்குகள் வாங்கி வந்த நிலையில், 2021 தேர்தலில் பாஜக எப்படி எம்.எல்.ஏ.க்களை வென்றது என்பதே இதற்கான பதில். அதிமுக யார் தயவும் இன்றி, தனித்து போட்டியிட்டு தேர்தல்களை வென்ற இயக்கம். நிர்வாகிகள் வெளிவந்ததை மறைக்க அதிமுகவை வளர்க்க பாஜகவின் ஆட்கள் தேவை என்பது நகையே!” என குறிப்பிட்டுள்ளார்.  


இது இருகட்சிகளின் தொண்டர்கள் உட்பட நிர்வாகிகள் வரையிலும், அதிர்ச்சியையும் குழப்பத்தினையும் ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்னர், அதிமுக மற்றும் பாஜகவின் இரண்டாம் கட்ட மற்றும் மூன்றாம் கட்ட நிர்வாகிகளுக்கு மத்தியில் சமூக வலைதளங்களில் மோதலும், உரசலும் இருந்து வந்தது. அதன் பின்னர், அதிமுக மற்றும் பாஜக தரப்பில் கூட்டணியில் தான் உள்ளோம் என கூறீவந்தனர். ஆனால், இன்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜகவில் இருந்து நிர்வாகிகளை தங்கள் பக்கம் இழுத்து திராவிடக் கட்சிகளை வளர்க்கு நிலை உருவாகி உள்ளது என அதிமுக பெயரைக் குறிப்பிடாமல், அதிமுகவை விமர்சனம் செய்து இருந்தார். இதற்கு அதிமுக ஐ.டி. விங் நிர்வாகி சிங்கை ராமச்சந்திரன், தனது டிவிட்டர் பக்கத்தில் பதிலடி கொடுத்து இருந்தார். 


எடப்பாடி உருவப்படம் எரிப்பு


  சிங்கை ராமச்சந்திரன் ட்வீட்டை கண்டித்து அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உருவப்படத்தினை எரித்துள்ளனர். இதனால் அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் நேரடியாக முக்கியத் தலைவர்களே மோதிக் கொள்வதால் கூட்டணியில் விரிசல் அதிகமாகியுள்ளது வெளிப்படையாகவே தெரிகிறது என அரசியல் வட்டாரத்தில் பேச்சுக்கள் அதிகமாகியுள்ளது.