சட்டமன்ற தேர்தலில் படுதோல்வியை சந்தித்த மக்கள் நீதி மய்யம், அண்மையில் நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலிலும் படுதோல்வியை சந்தித்தது. முன்னதாக, உள்கட்சி பூசலால் பல நிர்வாகிகள் கட்சியில் இருந்து வெளியேறிய நிலையில், அண்மையில் கட்சியின் ஊடகப் பிரிவு மாநில துணை செயலாளர் தொல்காப்பியனும் ராஜினாமா செய்வதாக தெரிவித்தார்.
கட்சியிலிருந்துவெளியேறிய அவர் கட்சியின் மீது, கட்சிக்கு வியூகங்களை வகுத்து கொடுக்கும் சங்கியா சொல்யூஷன் மீதும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார். இது குறித்து அவர், “ஐயர் என்று ஜாதிப் பெயரை சேர்த்துக் கொண்டதன் மூலம் ஆரியக் கோட்பாட்டில் கமல்ஹாசன் அதிக பிடிப்புக் காட்டுவதாக விமர்சித்திருக்கிறார்.
மேலும், “கட்சித் தொண்டர்களின் அரசியல் வாழ்வுக்கே கிஞ்சித்தும் பொறுப்பு ஏற்க விரும்பாத உங்களால் இந்த நாட்டு மக்களின் துன்ப துயரங்களுக்கு எவ்வாறு செவி சாய்க்க முடியும்? மக்களின் முனேற்றத்திற்கு உழைக்கும் பொறுப்பான தலைவராக உங்களால் எப்படி செயல்பட முடியும்” என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
இது குறித்து அவரிடம் ஏபிபி நாடு மூலமாக தொடர்பு கொண்டு பேசினோம்.
அவர் பேசும் போது, “ கடந்த ஒரு வருடமாக கட்சி பணி எதுவும் நான் செய்வதில்லை. வெளியே இருந்துதான் இயங்கிக்கொண்டு இருக்கிறேன். கமல் சங்கியா சொல்யூஷன் நிர்வாகிகள்கிட்ட மட்டும்தான் பேசிக்கொண்டிருக்கிறார்.
அவரோட சினிமா வாழ்கையிலும் அந்த நாலு பேர்தான் இருக்காங்க, அரசியல் வாழ்கையிலும் அந்த நாலு பேர் தான் இருக்காங்க. கமல் இன்னும் அவர்கள் பிடியில் இருந்து வெளியே வரவில்லை. அவர்கள் கட்சி சார்ந்த முடிவுகளை எடுக்கும் வரையில், கட்சி வள்ர்ச்சியை நோக்கி செல்லாது என்பதே எனது கருத்து.
அவர்களால்தான் மட்டும்தான் பாதிப்பு என்பதை எப்படி நீங்கள் சொல்கிறீர்கள்?
உங்களுக்கு ஒரு உதாரணம் சொல்கிறேன். சட்டமன்ற தேர்தலின் அமைக்கப்பட்ட மேடையை வடிவமைப்பை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அதில் கமல் அகண்ட மேடையில் அமர்ந்திருப்பார். மகேந்திரன் உட்பட ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் கைக்கட்டிக்கொண்டு நிற்பர். இந்த முறை மேல் கீழ் ஏற்றதாழ்வை நினைவை ஏற்படுத்துவதாக உள்ளது. இது முழுக்க முழுக்க விஜய் டிவி மகேந்திரன் மற்றும் சுரேஷ் அய்யர் அவர்களுடைய திட்டம்.
அவர்கள் வடிவமைக்கும் திட்டத்தைதான் கமலும் பின்பற்றுகிறார். இந்த பிராமண ஏகாதிபத்தியத்தால்தான் பல நிர்வாகிகள் வெளியே சென்றனர். அது தற்போதும் தொடர்ந்து வருகிறது.
கமல் படங்கள் அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி வருகிறாரே..? கட்சியில் அவரது தலையீடு எப்படி இருக்கிறது?
கட்சியில் வேலை செய்யும் அனைவருக்கும் மாதம் மாதம் சம்பளம் கொடுக்க அவரது சொந்தப்பணத்தைத்தான் செலவு செய்து வருகிறார். அதற்காக சம்பாதிக்க வேண்டியுள்ளது. ஆனால் இங்கு கட்சியை ஏன் நடத்த வேண்டும் என்ற கேள்வி இருக்கிறது. அதற்கு தேவையான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
அந்த சங்கியா சொல்யூஷனுக்கு அடிப்படை அரசியல் தெளிவே கிடையாது. அங்கிருக்கும் அனைவரும் விஜய் டிவியில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களாக இருந்தவர்கள். அவர்களை கொண்டு வந்து கட்சி கொள்கை வடிவமைப்பில் அமரவைத்திருப்பது அபத்தமான விஷயம். நாடாளுமன்ற தேர்தலில் வெறும் 5 வாக்குசதவீதத்தை பெற்ற கட்சி தற்போது 2 சதவீதத்தை கூட எட்டவில்லை. இன்னும் சொல்லப்போனால் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் நிற்பதற்கு எங்களிடம் வேட்பாளர்கள் கூட கிடையாது. போட்டியிட யாரும் வரவில்லை.
கமல் 5 வயதில் இருந்து தற்போது வரை சினிமாவை பற்றி யோசித்துக்கொண்டிருக்கிறார். அப்படிப்பட்டவர் அரசியலுக்கு வரும் போது, தடுமாறுவது இயல்புதான். அந்த தடுமாற்றத்தை இவர்கள் பயன்படுத்திக்கொள்கிறார்கள். எங்களை போன்ற நிர்வாகிகளிடம் அவர்களே கட்சி குறித்து எதுவுமே விவாதிப்பதில்லை. கேட்கபதில்லை.அதனால் கமல் அரசியல் அறிவு உள்ளவர்களை தங்களோடு இணைத்துக்கொள்ள வேண்டும்.” என்றார்.