கலிங்கப்பட்டிக்கு மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்து தராவிட்டால் என்னுடைய அரசியல் வாழ்க்கையையே அழித்துவிடுவேன் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மிரட்டினார் என சங்கரன்கோவில் (தனி) தொகுதி திமுக எம்.எல்.ஏ ராஜா பரபரப்பு புகார் ஒன்றை கூறியுள்ளார்.
குருவிகுளம் ஒன்றியத்தைச் சேர்ந்த சாய மலையிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்தப்பட்ட அரசு மருத்துவமனையாக மாற்றினால் அதை சுற்றியுள்ள பல கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பயன்பெறுவர் என்று திமுக எம்.எல்.ஏ ராஜா மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியத்திடம் மனு அளித்துள்ளார்.
திமுக எம்.எல்.ஏ ராஜாவின் கோரிக்கையை ஏற்று சாய மலையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்தப்பட்ட அரசு மருத்துவமனையாக மாற்றுவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தனது சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
ஆனால், கலிங்கப்பட்டியில் ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்தாமல், சாய மலையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்தும் பணிகள் தொடங்கியுள்ளன. இதனை அறிந்த வைகோ, சங்கரன்கோவில் திமுக எம்.எல்.ஏ –வான ராஜாவை தொடர்புகொண்டு கடுமையாக பேசி மிரட்டியுள்ளார்.
இது குறித்து சங்கரன்கோவில் எம்.எல்.ஏ ராஜாவிடம் கேட்டபோது, வைகோ என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மிரட்டியது உண்மைதான். என் அரசியல் வாழ்க்கையையே அழித்துவிடுவதாக சொன்னதும் உண்மைதான் என்றார். எதற்காக அப்படி உங்களிடம் பேசினார் என கேட்டதற்கு, மக்களுக்கு பொதுவான இடமாக இருக்கக் கூடிய சாய மலை அல்லது குருவி குளத்திலேயே மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என்று அப்பகுதியினர் கோரிக்கை வைத்தார்கள். அதன் அடிப்படையில் பணிகளை செய்ய அறிவுறுத்தினேன். வைகோ கலிங்கப்பட்டி சுகாதார நிலையத்தை மேம்படுத்த கேட்டது சத்தியமாக எனக்கு தெரியாது.
மாவட்ட செயலாளர் போனில் இருந்து எனக்கு அழைத்த வைகோ என்னை கடுமையாக திட்டினார். நான் பதில் அளிக்க அவகாசம் கூட கொடுக்காமல், எனக்கே அரசியல் கற்றுக்கொடுக்றீயா ? உன்ன ஜெயிக்க வச்சதுக்கு நீ காட்டுற நன்றி இதுதானா ? என்று ஆவேசமாக பேசினார்.
அதுமட்டுமில்லமால் உன்ன முதலமைச்சர் கிட்ட சொல்லி, நீ இனிமே அரசியலிலேயே இல்லாமல் செய்துவிடுவேன் என்றேல்லாம் மிரட்டினார். தொகுதி பக்கம் நீ வரவும் முடியாது, எதுவும் செய்ய முடியாது. இது குறித்து எங்கள் மாவட்ட செயலாளர் சிவபத்மநாபன் மற்றும் திமுக தலைமைக்கும் தகவல் சொல்லியிருக்கிறேன் என்றார்.