சென்னை உள்பட தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை அதிகமாக பெய்து வருகிறது. இதனால் சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் சாலைகளிலும், தெருக்களிலும் தேங்கி இருப்பதோடு, மக்களின் வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்துள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை முழுவதும் மழைநீர் தேங்கிய பகுதிகளுக்குச் சுற்றுபயணம் மேற்கொண்டு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார். அவரைப் பின்பற்றி திமுகவின் அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை ஆர்.கே நகர் தொகுதியில் அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஜே.ஜே.எபிநேசர் முன்னிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் திமுக இளைஞரணி சார்பில் வழங்கப்பட்ட நிவாரணப் பொருள்களில் அரிசி வழங்கப்பட்ட பையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், மறைந்த முன்னாள் முதல்வரும் முன்னாள் திமுக தலைவருமான மு.கருணாநிதி, திமுகவின் மாநில இளைஞரணித் தலைவரும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் படங்கள் அச்சிடப்பட்டிருந்தது. இது அதிமுக ஆட்சியில் அதிகம் விமர்சிக்கப்பட்ட `ஸ்டிக்கர் கலாச்சாரம்’ சர்ச்சைகளைப் போல, அதிகம் பேசப்பட்டு வருகிறது.
கடந்த 2015ஆம் ஆண்டு, சென்னையில் அதிக மழை பெய்து, செம்பரம்பாக்கம் ஏரி திறந்து வைக்கப்பட்டு, சென்னையில் பல்வேறு பகுதிகளில் பெருவெள்ளம் ஏற்பட்டது. அப்போதைய அதிமுக ஆட்சியின் மழைக்கால நடவடிக்கைகள் கடுமையாக விமர்சிக்கப்பட்ட போதும், அதிமுக அரசு சார்பில் வழங்கப்பட்ட நிவாரணப் பொருள்களிலும், பிற மாவட்டங்களில் இருந்து மக்களாலும், தன்னார்வலர்களாலும் அனுப்பப்பட்ட நிவாரணப் பொருள்களிலும் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை ஸ்டிக்கராக ஒட்டிக் கொடுத்ததாக சர்ச்சையில் சிக்கினர். மேலும், அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட விலையில்லா பொருள்களிலும் ஜெயலலிதாவின் முகம் அச்சடிக்கப்பட்ட ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. ஒரு நிகழ்ச்சியில், ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு அமைச்சர்கள் தலைமையில் நடத்தப்பட்ட திருமணக் கூட்டங்களில் மணமக்கள் தலை மீதும் ஜெயலலிதா படம் ஸ்டிக்கராக ஒட்டப்பட்டதும் சர்ச்சைகளைக் கிளப்பியது.
கடந்த 2020ஆம் ஆண்டு, கொரோனா பெருந்தொற்று பரவிய போது, ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. உணவு இல்லாமல் தவித்த மக்களுக்கு உதவும் வகையில் திமுக `ஒன்றிணைவோம் வா’ திட்டத்தை அறிவித்த போது, அதில் வழங்கப்பட்ட நிவாரணப் பொருள்களில் திமுக தொடர்பான எந்த அடையாளமும் இல்லாமல் வழங்கத் தலைமையிடம் இருந்து உத்தரவிடப்பட்டிருந்தது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, மக்களுக்கு வழங்கப்பட்ட நலத்திட்ட உதவிகளில் கட்சியின் அடையாளங்கள் எதுவும் இல்லாமல் வழங்கப்பட்டன. பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பைகளில் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் படங்களை மாற்றாமல் அப்படியே மாணவர்களுக்கு வழங்குமாறு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டதும் அதிகம் பாராட்டப்பட்டது.
இந்நிலையில், மீண்டும் சென்னையில் வெள்ளம் ஏற்படுவதற்கான முன்னோட்டங்கள் தொடங்கியுள்ள நிலையில், திமுகவினர் வழங்கியுள்ள நிவாரணப் பொருள்களில் கட்சித் தலைவர்களின் படங்கள் தென்படத் தொடங்கியதை விளம்பரம் என எதிர்க்கட்சியினரும், மீண்டும் ஸ்டிக்கர் கலாச்சாரம் தலைதூக்குவதாக விமர்சகர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். விரைவில் மாநகராட்சி தேர்தல் நடைபெற இருப்பதால், கவுன்சிலர் பதவிகளுக்காக கட்சி உறுப்பினர்கள் சிலர் தலைமையின் கட்டுப்பாட்டை மீறி இவ்வாறு நிவாரணப் பொருள்களின் பைகள் மீது அச்சிட்டிருக்கலாம் என திமுக தரப்பில் கூறப்படுகிறது.