ஆதவ் அர்ஜூனா மீது ஆக்‌ஷன்: திருமா அதிரடி- தவெக பொருளாளர் ஆகும் ஆதவ்?

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருந்து, அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து 6 மாத காலத்துக்கு இடைநீக்கம் செய்யப்படுவதாக, விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.

Continues below advertisement

 கட்சியில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், ஆதவ் அர்ஜூனா தவெகவில் சேர உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அவருக்கு துணை பொதுச் செயலாளர் அல்லது பொருளாளர் பொறுப்பு வழங்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. 

Continues below advertisement

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:

கட்சியின் துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா அண்மைக் காலமாக கட்சியின் நலன்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறார் என்பது தலைமை நிர்வாகத்தின் கவனத்துக்குத் தெரிய வந்தது. இது குறித்து கடந்த 07-12-2024 அன்று கட்சியின் பொதுச் செயலாளர்கள் உள்ளிட்ட முன்னணித் தோழர்களுடன் கலந்தாய்வு செய்யப்பட்டது.

நன்மதிப்பையும் நம்பகத் தன்மையையும் கேள்விக்குள்ளாக்கிய பேச்சு

கட்சித் தலைமையின் அறிவுறுத்தல்களையும் மீறி, தொடர்ச்சியாக அவர் எதிர்மறையாக செயல்பட்டு வருவதும், அத்தகைய செயல்பாடுகள், மேலோட்டமாக நோக்கினால் கட்சியின் நலன் மற்றும் அதிகார வலிமைக்கானதாகத் தோன்றினாலும்; அவை கட்சி மற்றும் தலைமையின் மீதான நன்மதிப்பையும் நம்பகத் தன்மையையும் கேள்விக்குள்ளாக்கும் வகையில், பொதுவெளியில் கடுமையான விமர்சனங்களை உருவாக்கியிருக்கிறது. 

தவறான முன்மாதிரியாகி விடும் சூழல்

இத்தகைய போக்குகள், கட்சிப் பொறுப்பாளர்களிடையே நிலவும் கட்டுக்கோப்பைச் சீர்குலைக்கும் வகையில், கட்சிக்குள்ளேயே ஒரு எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், கட்சியினருக்கு இது ஒரு "தவறான முன்மாதிரியாக" அமைந்து விடும் என்கிற சூழலையும் உருவாக்கியுள்ளது.

ஆதவ் அர்ஜூனா மீது ஒழுங்கு நடவடிக்கை

இத்தகைய சூழலைக் கருத்தில் கொண்டு, கட்சியின் நலன்களை முன்னிறுத்தி, கட்சித் தலைவர் மற்றும் பொதுச்செயலாளர்கள் ஆகிய மூவர் உள்ளடங்கிய தலைமை நிர்வாகக் குழுவில், ஆதவ் அர்ஜூனா மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்வதென தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, ஆதவ் அர்ஜூனா கட்சியிலிருந்து ஆறுமாத காலத்துக்கு இடைநீக்கம் செய்யப்படுகிறார். 

இவ்வாறு விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.  

இந்த நிலையில், தவெகவுடன் ஆரம்பத்தில் இருந்தே நெருக்கம் காட்டி வரும் ஆதவ் அர்ஜூனா, அக்கட்சியில் சேர வாய்ப்புள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது. தவெகவில் தனக்கு பொருளாளர் அல்லது துணைத் தலைவர் என ஏதாவது முக்கிய பொறுப்பு ஒன்று உருவாக்கித் தர வேண்டும் என்று ஆதவ் அர்ஜூனா விஜயிடம் கேட்டுக் கொண்டுள்ளதாகவும், அதற்காக வரும் சட்டப்பேரவை தேர்தலில் தன்னுடைய அரசியல் வியூக வகுப்பு நிறுவனம் மூலம் தமிழக  வெற்றிக் கழகத்திற்காக பணியாற்றத் தான் தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது.

Continues below advertisement
Sponsored Links by Taboola