BJP DMK: மதுரை டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை கைவிட வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ள நிலையில், அண்ணாமலை இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை தகவல்:
அண்ணாமலை வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “ திமுக அரசின் தவறான, முழுமையற்ற தகவல்களால், மதுரை அரிட்டாபட்டி, நாயக்கர்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க, பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் சூழல் உருவாகியுள்ளது. இது தொடர்பாக, மாண்புமிகு மத்திய நிலக்கரி மற்றும் சுரங்க அமைச்சர் கிருஷ்ண ரெட்டிக்கு கடிதம் எழுதியதோடு மட்டுமல்லாமல், மதுரை அரிட்டாபட்டி, நாயக்கர்பட்டி, கவட்டையம்பட்டி, எட்டிமங்கலம், ஏ.வல்லாளப்பட்டி, அரிட்டாபட்டி, கிடாரிப்பட்டி, நரசிங்கம்பட்டி உள்ளிட்ட கிராமங்கள் உள்ள பகுதிகளில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க, பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிப்பது குறித்து, தொலைப்பேசியிலும் அழைத்து, டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் முடிவைக் கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்.
இதையடுத்து, டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் முடிவைக் கைவிடுவதைக் குறித்துப் பரிசீலிக்கிறேன் என்று மத்திய அமைச்சர் உறுதி அளித்துள்ளார். மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பது குறித்து திமுக அரசு தெரிவித்த தகவல்களின் அடிப்படையில் மட்டுமே, இந்தச் சுரங்கம் அமைப்பது குறித்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது, பொதுமக்கள் எதிர்ப்பை அடுத்து, திமுக அரசு நாடகமாடிக் கொண்டிருக்கிறது. பிரதமர் மோடியின் நல்லாட்சியில், விவசாயிகள் நலனுக்கான திட்டங்கள் மட்டுமே செயல்படுத்தப்பட்டிருக்கின்றன. விவசாயிகள் நலனுக்கு எதிரான எந்தச் செயல்பாடுகளையும், நமது பிரதமர் அவர்கள் மேற்கொள்ள மாட்டார் என்பது உறுதி” என அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.
தமிழக அரசு தீர்மானம்:
மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தை எதிர்த்து, அரிட்டாப்பட்டி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்த திட்டத்திற்கு தமிழக அரசும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் தான், இன்று கூடும் தமிழக சட்டப்பேரவையில், டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை கைவிடக் கோரி தனித்தீர்மானத்தை நிறைவேற்ற முதலமைச்சர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். இந்நிலையில், டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை கைவிட மத்திய அரசு பரிசீலிப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது அரிட்டாப்பட்டி உள்ளிட்ட போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மதுரை கிராம மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.