சேலம் மாவட்டம் ஏற்காடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பேளூரில் "என் மண் என் மக்கள்" யாத்திரையில் கலந்து கொண்டார். பின்னர் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியது. "தமிழகத்தில் பழங்குடியினருக்கென ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 2 தொகுதிகளில் ஒன்றான ஏற்காடு சட்டமன்றத் தொகுதிக்குள்பட்ட பேளூரில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது மகிழ்ச்சியளிக்கிறது. 63 நாயன்மார்களின் ஒருவரின் சொந்த ஊர் மற்றும் உலகப் புகழ் பெற்ற சிவஸ்தலம் அமைந்துள்ள பேளூரில் பேசுவது மகிழ்ச்சியளிக்கிறது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சியை விட பாரதிய ஜனதாக் கட்சி ஆட்சியில், தமிழகத்திற்கான திட்டங்கள் மற்றும் நிதி இரண்டரை மடங்கு அதிகமாக வழங்கப்பட்டுள்ளது. தமிழக மக்களின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்காக பிரதமர் பாடுபட்டு வருகிறார். ஊழல் என்ற வார்த்தைக்கே இடம் இல்லை. ஏற்காடு தொகுதியில் உள்ள கிழக்காடு கிராமத்திற்கு இதுவரை சாலை வசதி இல்லை. 93 குக்கிராமங்கள் உள்ள சேர்வராயன் மலை, கல்வராயன் மலைப் பகுதிக்கு அடிப்படை வசதிகள் இல்லை. சமூக நீதி என்ற பேசி மக்களின் பணத்தை திமுகவினர் கொள்ளையடித்து வருகின்றனர். உண்மையான சமூக நீதி என்பது, பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்தவருக்கு குடியரசுத் தலைவராகும் வாய்ப்பு பாரதிய ஜனதாக் கட்சிதான் வழங்கியது. ஜார்கண்ட் மாநிலத்தில் பழங்குடியினருக்கான தொகுதிகளில் 85 சதவீத இடங்களில் பாஜக தான் வென்றுள்ளது. போல சமூக நீதியை மக்கள் வெறுக்கும் நிலை உள்ளது.


 


பழங்குடியினருக்காக ஏகலைவா பள்ளிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்தியா முழுவதும் 694 பள்ளிகளில் 1,15,191 குழந்தைகள் அங்கு பயில்கின்றனர். தமிழகத்தில் வெறும் 6 பள்ளிகள் மட்டும்தான் உள்ளன. அங்கு 2408 பேர் தான் படிக்கின்றனர்.இப்பள்ளிகளில் பயில்வோர் ஒரு ரூபாய் கூட செலவு செய்யத் தேவையில்லை. தமிழகத்தில் மத்திய அரசு நடத்தும் பள்ளிகள், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் வேண்டாம் என்ற திமுகவின் மனநிலைதான் இதற்கு காரணம். கடந்த 30 வருடங்களில் 120-க்கும் மேற்பட்ட முறை வாக்களித்தும் ஏற்காடு தொகுதியில் மாற்றம் வரவில்லை என்றால் யார் காரணம் என்பதை பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கொள்ளையடிப்பதுதான் நடந்து கொண்டிருக்கிறது. தமிழக அமைச்சரவையில் 2 பேர் மட்டுமே பட்டியல் இனத்தை சேர்ந்தவர் என்றால், திமுகவின் சமூகநீதியை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.


 


யாத்திரை தொடங்கும் போது தமிழகத்தின் கடன் 7 லட்சம் கோடியாக இருந்தது. ஆனால் 6 மாதத்தில் 8,34,544 கோடியாக அதிகரித்து விட்டது. கடன் வாங்குவதில் மட்டுமே இந்தியாவில் நம்பர் 1 மாநிலமாக உள்ளது. இந்த கடனை அடைக்க 87 வருடமாகும். ஏழை மக்களின் குழந்தைகள் தொடர்ந்து ஏழைகளாகவே உள்ளனர். ஒவ்வொரு ரேஷன் அட்டையின் மீது ரூ.3 லட்சத்து 81 ஆயிரம் கடன் உள்ளது. நாடு முழுவதும் 8.5 லட்சம் கோடி ரூபாய் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எந்தவித சத்தமும் இல்லாமல், பிரதமர் பயனாளியின் வங்கிக் கணக்கில் சேர்த்துள்ளார். ஆனால்,  திமுகவினர் வெள்ள நிவாரணத் தொகை ரூ.6 ஆயிரம் வழங்க பல்வேறு தொந்தரவு கொடுக்கின்றனர். கட்சியை பார்க்காமல் மோடி என்ற மனிதனை பார்த்து வாக்களிக்க வேண்டும். 2024-ல் இந்தியாவின் தலையெழுத்திற்கான தேர்தல். மோடி என்கிற வார்த்தைக்கு எந்தவித விருப்பு வெறுப்பின்றி வாக்களிக்க வேண்டும். இலவசங்கள் வேண்டாம். வளர்ச்சி வேண்டும். ஏற்காட்டில் அரசு அதிகாரிகள் கால் வைக்காத இடத்திற்கு மோடி வருவார். பாஜக எம்.பிக்கள் வருவார்கள். மோடி மீது நம்பிக்கை வைத்து எம்.பியை தேர்ந்தெடுக்க வேண்டும். மோடி உத்தரவாதம் என்பதை மக்கள் நம்புகின்றனர். வீடில்லாதவர்களுக்கு வீடு, காப்பீட்டுத் திட்டம், கேஸ் இணைப்பு, வீடுகளுக்கு குடிநீர் என சொன்ன அனைத்தையும் நிறைவேற்றி தந்துள்ளார். இந்தியா முழுவதும் 10 கோடி பெண்களுக்கு இலவச கேஸ் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மோடி சார்பாகத்தான் நாங்கள் வந்துள்ளோம். மோடி என்கிற மனிதர் இல்லாவிட்டால் அண்ணாமலை என்ற மனிதன் பூஜ்ஜியம். வாரத்திற்கு ஒரு முறை போன் செய்து பிரதமர் கேட்கிறார். யாத்திரை எப்படி செல்கிறது என்று கேட்டறிவார். மோடி மீதான மதிப்பை வாக்காக மாற்றி வழங்க வேண்டும். ஒரேயொரு முறை ஏற்காடு தொகுதியில் மோடிக்கு வாக்களித்து பாருங்கள். மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்குவோம்" என்றார்.