பிரதமர் நரேந்திர மோடி வழங்கி வரும் இலவச ரேஷனுக்காக பாரதிய ஜனதா கட்சிக்கு (பாஜக) வாக்களிக்குமாறு உத்தர பிரதேச முன்னாள் முதலமைச்சரும் பகுஜன் சமாஜ் கட்சி தலைவருமான மாயாவதி வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுப்பது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோ உண்மையானதா? இல்லையா? என இந்த கட்டுரையில் தெரிந்து கொள்வோம்.


வீடியோவில் மாயாவதி சொன்னது என்ன?


பாஜகவுக்கு வாக்களிக்குமாறு வாக்காளர்களை மாயாவதி கேட்டு கொள்வது போல் வீடியோவில் பதிவாகியுள்ளது. 


உண்மை என்ன?


கடந்த 2024ஆம் ஆண்டு, மே 4ஆம் தேதி, ஆக்ராவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மாயாவதி பேசிய உரையில் ஒரு பகுதிதான் வைரலானது. அவரின் முழு உரையில், இலவச ரேஷனுக்காக பாஜகவுக்கு வாக்களிக்குமாறு ஆர்.எஸ்.எஸ், பாஜகவை சேர்ந்தவர்கள் வேண்டுகோள் விடுத்து வருவதாக கூறினார். அவரது பேச்சின் இந்த சிறிய பகுதி மட்டும் எடிட் செய்யப்பட்டு, அந்த வீடியோ வைரலாக்கப்பட்டது. எனவே, மாயாவதி சொன்னதாக பரப்பப்படும் செய்தி பொய்யானது.


வைரலான வீடியோவின் உண்மைத் தன்மையை சரிபார்க்க, பாஜகவுக்கு வாக்களிப்பது குறித்து மாயாவதி பேசிய அசல் வீடியோவைக் கண்டுபிடிக்க அதற்கு தொடர்புடைய முக்கிய வார்த்தைகளை இணையத்தில் தேடினோம்.


அப்போது தேடுகையில், பகுஜன் சமாஜ் கட்சியின் யூடியூப் பக்கத்தில் மாயாவதியின் முழு வீடியோ கிடைத்தது. அதுமட்டும் இன்றி, பல யூடியூப் பக்கங்களில் மாயாவதி பேசிய அந்த வீடியோ கிடைத்தது. அந்த வீடியோவின் 26:12 நிமிடத்தில், "இங்கு சட்டசபை தேர்தல் நடந்த போதும், தற்போது நாடு முழுவதும் லோக்சபா தேர்தலின் போதும், ரேஷன் என்ற பெயரில் வாக்காளர்களை ஏமாற்றும் பணியை பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் மேற்கொண்டனர் என்பது அனைவரும் அறிந்ததே.


ஏழை, எளிய மக்களுக்கு மத்திய அரசு வழங்கியதை, நரேந்திர மோடி, உங்களுக்கு இலவச ரேஷன் கொடுத்தது போல் பாஜக, ஆர்.எஸ்.எஸ்காரர்கள் கிராமம், கிராமமாக சென்று கூறி வருகின்றனர். அதனால்தான் நீங்கள் அவருக்கு கடன்பட்டிருப்பதாக கூறுகிறார்கள். எனவே, இதற்காக பாஜகவுக்கு வாக்களிக்குமாறு கூறி வருகிறார்கள்.


பா.ஜ.க அரசு ஏழைகளுக்கு அளித்து வரும் ரேஷன், அவர்களின் பாக்கெட்டில் இருந்து கொடுக்கப்படவில்லை. மாறாக உத்தரபிரதேச அரசுக்கும் மத்திய அரசுக்கும் மக்கள் செலுத்தும் வரியில் இருந்து கொடுக்கப்பட்டது" என பேசியுள்ளார். ஏஎன்ஐ, டைம்ஸ் ஆஃப் இந்தியா மற்றும் ஹிந்துஸ்தான் டைம்ஸ் போன்றவை இதை செய்தியாக வெளியிட்டது.


 



ஆனால், மாயாவதியின் முழு உரையில் இருந்து சிறிய பகுதி எடிட் செய்யப்பட்டு, அவர் பாஜகவுக்கு வாக்களிக்க சொல்வது போல் பரப்பப்பட்டு வருகிறது. இதன்மூலம், பாஜகவுக்கு மாயாவதி வாக்கு கேட்பது போன்று பரப்பப்படும் வீடியோ எடிட் செய்யப்பட்டது என்பது தெரிய வந்துள்ளது.


பின்குறிப்பு: இந்த செய்தி தொகுப்பு முதலில் சக்தி கலெக்டிவ் முன்னெடுப்பின் ஒரு பகுதியாக Factly என்ற இணைய செய்தி தளத்தில் வெளியிடப்பட்டது. அதன் சாராம்சத்தை அப்படியே பின்பற்றி, ABP Nadu தனது வாசகர்களுக்கு ஏற்ப இந்த செய்தி தொகுப்பை தமிழில் மொழிபெயர்த்து எழுதியுள்ளது.