NIA Probe: டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் அடுத்தடுத்து சிறைக்கு அனுப்பப்பட்டனர். டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா தொடங்கி மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் என அடுத்தடுத்து அதிரடி கைது நடந்தது.


இறுதியாக, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். 6 மாத சட்ட போராட்டத்திற்கு பிறகு, சஞ்சய் சிங்குக்கு சமீபத்தில் பிணை கிடைத்தது. ஆனால், மணீஷ் சிசோடியாவும் அரவிந்த் கெஜ்ரிவாலும் இன்னும் சிறையில்தான் உள்ளனர்.


ஆம் ஆத்மி கட்சிக்கு தொடர் நெருக்கடி:


தேர்தல் நெருங்கும் சூழலில், ஆம் ஆத்மி கட்சி பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. இப்படிப்பட்ட பரபரப்பான சூழலில், மக்களவை தேர்தலையொட்டி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.


இந்த நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அடித்த பிரச்னை உருவாகியுள்ளது. சீக்கியர்களுக்கான நீதி (Sikhs for Justice) என்ற தடை செய்யப்பட்ட அமைப்பிடம் நிதி பெற்றதாக புகார் எழுந்த நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலிடம்  தேசிய புலனாய்வு முகமை விசாரணை செய்ய டெல்லி துணைநிலை ஆளுநர் வி. கே. சக்சேனா பரிந்துரை செய்துள்ளார்.


இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு துணை நிலை ஆளுநரின் செயலாளர் எழுதியுள்ள கடிதத்தில், "கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி, தேவேந்திர பால் புல்லரை விடுதலை செய்வதற்காக தீவிரவாத காலிஸ்தானி குழுக்களிடமிருந்து 16 மில்லியன் டாலர் நிதி பெற்றதாக சக்சேனாவிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 


அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு விழுந்த அடுத்த அடி:


புகார்தாரரால் மின்னணு ஆதாரங்கள் சமர்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு, தடயவியல் ஆய்வு உட்பட முழு விசாரணை நடத்த வேண்டியிருக்கிறது" என குறிப்பிட்டுள்ளார். டெல்லி துணை நிலை ஆளுநரின் முடிவுக்கு ஆம் ஆத்மி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.


இதுகுறித்து டெல்லி அமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவருமான சௌரப் பரத்வாஜ் கூறுகையில், "பாஜகவின் தூண்டுதலில் கெஜ்ரிவாலுக்கு எதிரான மற்றொரு சதி இது. அவர்கள் டெல்லியில் உள்ள ஏழு தொகுதிகளிலும் தோல்வியடைய உள்ளனர். மக்களவைத் தேர்தலில் தோல்வி பயத்தால் திணறி வருகின்றனர்" என்றார்.


அமலாக்கத்துறை உள்ளிட்ட மத்திய விசாரணை அமைப்புகள் மூலம் எதிர்க்கட்சிகள் மிரட்டப்படுவதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக, ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் கடந்த ஜனவரி மாதம் கைது செய்யப்பட்டார்.


சோரன் கைது செய்யப்பட்ட இரண்டே மாதங்களில் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். சுதந்திர இந்திய வரலாற்றில் முதல்முறையாக சிட்டிங் முதலமைச்சர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.