தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை ‌ சார்பில் சாதி வாரி கணக்கெடுப்பை மத்திய, மாநில அரசுகள் உடனே நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி சேலம் கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு பங்கு இளைஞர் பேரவை நிறுவனத் தலைவர் தனியரசு கலந்து கொண்டார். ஆர்ப்பாட்டத்தில் இளைஞர்கள் சாதி வாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த கேட்டு மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். 


பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை நிறுவனத் தலைவர் தனியரசு, "நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கடந்துள்ளது. ஆனால் இதுவரை சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் தமிழகத்தில் 80 சதவீதம் மேல் உள்ளனர். ஆனால் அவர்களுக்கு கல்வி வேலைவாய்ப்பு உள்ளிட்ட உரிமைகள் மறுக்கப்படுகிறது என்றார். 



சாதி வாரி கணக்கெடுப்பை தமிழக அரசு நடத்தலாம் என உரிமை உள்ளது. ஆனால் மத்திய, மாநில அரசுகள் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தாமல் காலம் தாழ்த்தி வருகின்றன. அனைத்து சமுதாய மக்களின் இட ஒதுக்கீடு உரிமைகளை மீட்கும் வகையில் உடனடியாக சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். அந்த கோரிக்கையை வலியுறுத்தி அடுத்த கட்டமாக அனைத்து சமுதாய தலைவர்களையும் அழைத்து பேசி மதுரை, கோவை, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று கூறினார்.


சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த கோரி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உட்பட பல தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். பாஜக தலைமையிலான மத்திய அரசு ஒவ்வொரு மாநிலத்தின் உரிமைகளை பறித்து வருகிறது. நாடு முழுவதும் உள்ள 90% பெரும்பான்மையின மக்கள் தங்கள் உரிமைகளுக்காக போராடும் நிலை உள்ளது. ஆனால் 10 சதவீதம் உள்ள சிறுபான்மையினருக்கு அனைத்து சலுகைகளும் எளிதாக கிடைக்கிறது. ஜிஎஸ்டி நிதியைப் பிரித்து வழங்குவதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது என்று தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையில் நிறுவன தலைவர் தனியரசு குற்றம் சாட்டினார்.