நெல்லையில் திமுக அரசின் சட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் மக்கள் விரோத போக்கை கண்டித்து அமமுக சார்பில்  கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட டிடிவி தினகரன் பேசும் பொழுது, "அமமுக என்றாலே அது இளைஞர் பட்டாளம். பாராளுமன்ற தேர்தலில் இந்த தொகுதியில் அமமுக போட்டியிட்டாலும் சரி, கூட்டணி கட்சி போட்டியிட்டாலும் அவர்களுக்காக தேர்தல் பணியாற்றும்  நிர்வாகிகள்  அனைவரும் இங்கு வந்திருப்பது மகிழ்ச்சி. முதல்வர் ஜெயலலிதா தொகுதியில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் புதிதாக கிடைத்த குக்கர் சின்னத்தில் என்னை மாபெரும் வெற்றி பெறச் செய்தவர்கள் நீங்கள்.  பாராளுமன்ற  பொதுத் தேர்தலின் போது வேட்பு மனு தாக்கல் கடைசி நாளன்று தான் நமக்கு பரிசி பெட்டி சின்னம் கிடைத்தது. இருந்தாலும் பல தொகுதிகளில் லட்சங்களை தாண்டி வெற்றி பெற்றோம். பிரதமர் வேட்பாளரை சொல்ல முடியாத காரணத்தால் வெற்றி பெற முடியாமல் போனது. அப்போது சொன்னார்கள் டிடிவி அவ்ளோதான். இனி தேடி தான் கண்டுபிடிக்க வேண்டும் என்று சொன்னார்கள். அவர்களுக்கு ஒன்று தெரியவில்லை, டிடிவி என்பவன் தனிமனிதன் அல்ல, லட்சோப லட்சம் இளைஞர்களால், அம்மாவின் தொண்டர்களால், தாய்மார்களால் என உருவாக்கப்பட்ட ஒரு தலைவர் என்பது அவர்களுக்கு தெரியவில்லை, காரணம் நீங்கள் எல்லாரும் சேர்ந்து தான் என்னை தலைவன் ஆக்கியிருக்கீங்க என்று அவர்களுக்கு தெரியவில்லை, அவர்களெல்லாம் காசு பணத்தை கொடுத்து தலைவன் ஆனவர்கள், இந்த இயக்கம் அம்மாவின் கொள்கைகளை இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் அதை எடுத்து செல்கின்ற மாபெரும் தொண்டர்கள் நிறைந்த கூட்டம். தேர்தல் வெற்றி தோல்விக்காக கூடிய கூட்டம் அல்ல, 


அம்மாவின் கொள்கைகளை தாங்கி பிடிப்பவர்கள் தான் அமமுகவில் திரண்டு இருக்கின்றனர். அதனால் இந்த இயக்கம் யாராலும் தொட்டு பார்க்க முடியாத அளவில் உள்ளது.  சட்டமன்ற தேர்தலில்  வெற்றி பெறவில்லை என்றது சொன்னார்கள் டிடிவி ஒழிந்தான் என்று. ஆனால் நான் மனதிற்குள் சிரித்துக் கொண்டு நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ என்று பாரதியார் சொன்னது அமமுகவிற்கு பொருந்தும் என்பது அவர்களுக்கு தெரியவில்லை. இந்த இயக்கம் நேர்மையான பாதையில் பயணிக்கிறது. உண்மையான லட்சியத்தை அடையாமல் ஓயமாட்டோம். இந்த பாராளுமன்ற தேர்தலில் இந்தியாவின் பிரதமரை தேர்ந்தெடுக்கின்ற  கூட்டணியில் ஓர் அணிலை போல் அமமுக உறுதியாக செயல்படும். திமுகவில் ஆட்சி அதிகாரம், பணபலம் உள்ளது. பழனிச்சாமி கம்பெனியில் பண பலம் உள்ளது., புரட்சித்தலைவர் சின்னத்தை வைத்துக்கொண்டு கூட்டத்தை ஏமாற்றி விடலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால் அவர்கள் இந்த தேர்தலில் துரோகத்திற்கான பலனை அனுபவிக்காமல் விடமாட்டார்கள்..  நம்பிக்கை துரோகத்திற்கான செய்த தவறுக்கான தண்டனை தமிழக  மக்கள் அவர்களுக்கு கொடுத்தே ஆவார்கள். பழனிச்சாமி ஆட்சியில் செய்த ஊழல் முறைகேடுகளால் முன்னால் அமைச்சர்கள் ஓடி ஒளிகின்றனர். கவர்னர் தயவால் சிலர் தப்பித்துக் கொண்டு இருக்கின்றனர்.


திமுக உறுதியாக அவர்களை ஒன்றும் செய்யாது, ஆனால் தமிழக மக்கள் தேர்தலில் தண்டனையை கொடுப்பார்கள். பழனிச்சாமி செய்த துரோகத்தால்  ஊழலால் மக்கள் கோபப்பட்டு திமுக திருந்தியிருக்கிறது என அவர்களுக்கு ஆட்சியை கொடுத்தார்கள், ஆனால் திமுக நாங்கள் திருந்தவே மாட்டோம் என்பதை உறுதிப்படுத்தும் விதமாக மூன்றாண்டு ஆட்சி நடந்துள்ளது. 10 % வாக்குறுதி தான் நிறைவேற்றியுள்ளனர். 90% வாக்குறுதியை நிறைவேற்றவில்லை, பட்ஜெட் என்ற பெயரில் மக்களை ஏமாற்றும் திட்டங்களை அறிவித்துள்ளார்கள். திமுக ஆட்சியில் நெல்லை மண்டலத்தில் தாமிரபரணி ஆற்றை தூய்மைப்படுத்த திட்ட அறிக்கை தயாரிப்பதாக சொன்னார்கள், ஆனால் ஆட்சிக்கு வந்த 3 ஆண்டுக்கு பிறகும்  தாமிரபரணி ஆறு இருப்பது இப்போது தான் தெரிய வந்துள்ளது. தூத்துக்குடி,  நெல்லையில் புதிய தொழில் பூங்கா உருவாக்கப்படும் என தொழில்துறை கொள்கை விளக்க குறிப்பில் சொல்லி 2 ஆண்டுகள் ஆகியும் பயன்பாட்டிற்கு வந்துள்ளதா என கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய அவர், தூத்துக்குடியில் கடல் நீரை நன்னீராக்கும் ஆலையம் அமைக்கப்படும் என்று சொன்னதை செய்துள்ளனரா? ஏற்கனவே அறிவித்த திட்டங்கள் எதையும் செய்யாமல் குலசேகரபட்டினத்தில் விண்வெளி உந்து சக்தி பூங்காவும், தூத்துக்குடியில் நியோ டைட்டில் பூங்காவும் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் சொல்லியுள்ளனர். கூரை ஏறி கோழி பிடிக்காதவன் வானம் ஏறி வைகுண்டம் போரானாம் என கிண்டலடித்தார். 


மேலும் பேசிய அவர், 10 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரமாக இருக்கும் பட்டாசு தொழிலில் விபத்து, உயிரிழப்பு அடிக்கடி ஏற்படுகிறது, அதற்கு உரிய சீர்திருத்தங்கள் கொண்டு வரவேண்டும் என கோரிக்கை வைத்தும் காதில் வாங்கவில்லை. பழனிச்சாமி வைத்துள்ள கடன் சுமையை குறைப்போம் என திமுக ஆட்சிக்கு வந்தது. ஆனால் மூன்றரை ஆண்டு ஆட்சியில் மூன்றரை கோடி கடன்சுமை தமிழ்நாட்டு மேல் உள்ளது. கடந்த  சில மாதங்களுக்கு முன் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பை சரிசெய்ய ஏதாவது திட்டங்கள் அறிவித்தார்களா? விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு பெருவது சவாலாக உள்ளது. அதை விட்டு விட்டு இந்த ஆட்சியில் மக்களை ஏமாற்றி ஒரு குடும்பம் தான் பிழைக்கிறது என்பது தான் உண்மை. திமுக கூட்டணியை நம்பிக்கொண்டு தமிழ் நாட்டு மக்களை ஏமாற்றி வாக்குகளை விலைக்கு வாங்கி விடலாம் என நம்பி கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு இந்த தேர்தலில் சரியான பாடத்தை புகட்ட வேண்டும் என்றார். ஸ்டாலின் எதிர்க்கட்சியாக இருக்கும் போது என்ன சொல்லி ஆட்சிக்கு வந்தார். ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கி சூட்டிற்கு காரணமாக இருந்தவர்களையும், ஊழல் செய்த  அமைச்சர்களையும் ஆட்சிக்கு வந்ததும் தண்டிப்போம் என்றனர். பழனிச்சாமி ஆட்சியில் 60-40 என்று சொல்வது போல ஸ்டாலினும் பழனிச்சாமியோடு கூட்டணி வைத்திருப்பதாக மக்கள் பேசி கொள்கின்றனர். அதனால் தான் முன்னால் அமைச்சர்கள் இன்னைக்கு தைரியமாக ஸ்டாலினுக்கு எதிராக போர்க்கொடி தூக்க முடிகிறது. இதெல்லாம் ஒரு அண்டர்ஸ்டேங்கில் செய்து கொண்டிருக்கின்றனர் என எல்லாருக்கும் தெரிகிறது. இதற்கு முடிவு வேண்டும் என்றால் திமுக கூட்டணியை இந்த தேர்தலில் தோல்வியடைய செய்வது தமிழக மக்களின் பொறுப்பாக உள்ளது. ஆளுகின்ற தீய சக்தி திமுகவிற்கும், ஆண்ட துரோக சக்தி பழனிச்சாமிக்கும் மாற்று சக்தி அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் என்பதை தமிழக மக்கள் உணர தொடங்கிவிட்டனர், பழனிச்சாமியிடம் இருப்பது பணமூட்டைகள் தான். அங்கிருப்பது குண்டர் படையான டெண்டர் படை தான், ஆனால் இங்கிருப்பது உண்மையான தொண்டர்கள் படை, இதே போன்று கூட்டத்தை கூட அவர்கள் கோடிக்கணக்கில் செலவு செய்ய வேண்டும் என்று விமர்சித்து பேசினார். இரட்டை இலை துரோகிகள் கையில் சிக்கியுள்ளது. துரோகம் இழைக்கப்பட்டதால் உருவானது அதிமுக, இன்று அந்த இயக்கம் துரோகிகளால் கையகப்படுத்தப்பட்டுள்ளது. களவாடி வைத்துள்ளனர், அவர்களிடமிருந்து மீட்டெடுக்க வேண்டிய கடமை அமமுகவிற்கு உள்ளது" என்று பேசினார்,