திமுக ஆட்சி தொடர்ந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது என்றும் திமுக ஒரு குடும்ப கட்சி திமுகதான் வாரிசு அரசியல் செய்கிறது எனவும் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
இதுகுறித்து மதுரை விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
முதலமைச்சர் ஸ்டாலின் மதுரைக்கு என அறிவித்த பல திட்டங்கள் இதுவரை செயல்பாட்டுக்கு வரவில்லை. டைடல் பார்க் அறிவிப்பு வெளியிடப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன, நிதி ஒதுக்கி பணிகள் துவங்கவில்லை. அதிமுக ஆட்சி காலத்தில் துவங்கப்பட்ட குடிநீர் திட்ட பணியும் சுணக்கமாக உள்ளது. அதிமுக ஆட்சியின் திட்டங்களை கானல் நீராக பார்க்கிறது திமுக அரசு. விமான நிலைய ஓடுதள விரிவாக்கம், மெட்ரோ ரயில் பணிகளும் கிடப்பில் உள்ளன. விருதுநகரில் ஜவுளி பூங்கா அதிமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்ட திட்டம். நாங்கள் கொண்டு வந்த திட்டத்துக்கு அவர்கள் ஸ்டிக்கர் ஒட்டியுள்ளார்கள்.
திமுக கூட்டணி இன்னும் முடிவாகவில்லை. அந்த கூட்டணியிலிருந்து எந்தெந்த கட்சிகள் வெளியேறுகின்றன என பொறுத்திருந்து பாருங்கள். தேர்தல் அறிவித்த பின்னரே கூட்டணி முடிவாகும். பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்த வேண்டும் என்கிற அவசியமில்லை. 2014ல் ஜெயலலிதா பிரதமர் வேட்பாளரை முன்னிருத்தவில்லை. மாநிலத்திற்கு எதிரான பிரச்சனைகள் வருகிறபோது கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் நமக்கு பாதிப்பு ஏற்படுகிறது. அதனால் தான் அதிமுக சுயமாக முடிவெடுத்து இப்போது தேர்தலை சந்திக்கிறது.
தேர்தல் சீட் அடிப்படையில் வாரிசு அரசியலை தீர்மானிக்க முடியாது. தலைமைக்கு யார் வருகிறார்கள் என்பதை பொறுத்து தான் முடிவாகும். திமுக தான் வாரிசு அரசியல் செய்கிறது. குடும்ப கட்சி அது. இரட்டை இலை சின்னத்தை யாராலும் முடக்க முடியாது. உச்சநீதிமன்றம், தேர்தல் ஆணையம் தீர்ப்பளித்த பின்னர் எப்படி முடக்க முடியும்? ஓபிஎஸ் ஆசை நிராசையாக தான் முடியும்.
ஏ.வி.ராஜூ மீது ஏற்கனவே கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர். அவருடைய கருத்துக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து விட்டனர். மேகதாது விவகாரத்தில் நீதிமன்ற அவதூறு வழக்கு போட்டோம். திராணி இருந்தால் இந்த அரசை செய்ய சொல்லுங்கள். மேகதாது அணை விவகாரத்தில் துரோகம் செய்தது திமுக அரசு. திமுக ஆட்சி தொடர்ந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.