நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கட்சியின் விதியை மீறிய திமுக சுயோச்சை வேட்பாளர்கள் 56 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். திமுக, கூட்டணி கட்சி வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிட்டதால் அவர்களை இடைநீக்கம் செய்து கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், திருப்பூர், தருமபுரி, தஞ்சை, சேலம் மாவட்டங்களை சேர்ந்த திமுக நிர்வாகிகள் 56 பேரை கட்சியில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கட்சி கட்டுப்பாட்டை மீறி, சுயேச்சையாக கூட்டணி வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், இதேபோல், ஈடுபட்ட வேட்பாளர்களை இடைநீக்கம் செய்வதற்கு கட்சி தலைமை ஆயுத்தமாகி வருகிறது. இதன் பட்டியலும் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
வரும் 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ராமநாதபுரம் உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் செயலாளர்களும் / சில இடங்களில் பொறுப்பு அமைச்சர்களில் சிலரும் சரியாக வேலை பார்க்கவில்லை என முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு புகார் வந்திருக்கிறது. இதனால், கடும் கோபமடைந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று மாலை தனது திண்டுக்கல் பரப்புரை கூட்டத்தை முடித்த கையோடு, ஒவ்வொரு மாவட்ட செயலாளர்கள் / பொறுப்பாளர்கள், பொறுப்பு அமைச்சர்கள் என அத்தனை பேரையும் தனித்தனியாக தொலைபேசியில் அழைத்து பேசியிருக்கிறார்.
அப்போது, ’இந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் உங்களது மாவட்டத்தில் அதிக அளவில் வெற்றியை பெற வேண்டும். அப்படி அதிக இடங்களை கைப்பற்றி காட்டுபவர்கள் மட்டும் அறிவாலயம் பக்கம் வாருங்கள், முடியாதவர்கள் அப்படியே போய்விடுங்கள்’ என கடும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அதோடு, மாவட்டத்தில் வெற்றி வாய்ப்பை தவறவிடுபவர்களின் மாவட்ட செயலாளர் பொறுப்பும் அமைச்சர் பத்வியும் பறிக்கப்படும் என்றும் பேசியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிக இடங்களில் வென்று காட்டி அதிமுகவின் முகத்தில் கரியை பூச வேண்டும் என்றும் கொதித்திருக்கிறார்.
இதனால், சரியாக வேலை பார்க்காத மாவட்ட செயலாளர்கள் சிலரும் பொறுப்பு அமைச்சர்கள் சிலரும் அதிர்ச்சியடைந்திருக்கின்றனர். நம்முடைய பதவி பறிபோய்விடுமோ என்ற அச்சத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசிய அடுத்த விநாடியே தங்கள் மாவட்டத்தின் நிர்வாகிகளை அழைத்து தேர்தல் வேலைகளை முடுக்கி விட்டிருக்கின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்