தமிழக தேர்தல் பரப்புரைகள் கடந்த ஞாயிற்றுகிழமையோடு ஓய்ந்தநிலையில் தற்போது வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. அஜித்தின் அதட்டல், விஜயின் சைக்கிள் என்ட்ரி என்று இந்த தேர்தலிலும் சுவாரஸ்யங்களுக்கு பஞ்சமில்லாமல் நேரம் நகர்ந்து வருகின்றது. விருதுநகர் தொகுதியில் எந்த சின்னத்திற்கு வாக்களித்தாலும் அது பாஜகவிற்கு விழுவதாக புகாரும் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


இந்த நிலையில், மாலை 3 மணி நிலவரப்படி மாநிலம் முழுவதும் 53 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது. மொத்தம் 6 கோடியே 28 லட்சத்து 69 ஆயிரத்து 956 வாக்காளர்களில் இதுவரை 3 கோடியே 35 லட்சத்து 41 ஆயிரத்து 120 பேர் வாக்களித்துள்ளனர். 


திருவள்ளூரில் 52.42 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது, சென்னையில் 46.46 சதவிகிதமும், காஞ்சிபுரத்தில் 54.29, தர்மபுரி 56.84, திருவண்ணாமலையில் 56.71, விழுப்புரத்தில் 57.51, சேலத்தில் 56.53, நாமக்கல்லில் 59.73, ஈரோட்டில் 55.89 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல நீலகிரியில் 51.17, கோவையில் 50.77, திண்டுக்கல்லில் 56.28, கரூரில் 58.62, திருச்சியில் 54.53, பெரம்பலூரில் 56.94, கடலூரில் 54.92, நாகையில் 49.59, திருவாரூரில் 55.31 மற்றும் தஞ்சையில் 55.13 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது.