பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை ”மீண்டும் மோடி வேண்டும் மோடி” என்ற வாசகத்தை முன்னிறுத்தி ’என் மண் என் மக்கள்’ என்ற யாத்திரையை ராமேஸ்வரத்தில் இருந்து தொடங்கி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதியில் இன்று நடைபெற்ற யாத்திரையில் பாஜக தமிழக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் ஜான்பாண்டியன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு நெல்லை மாவட்ட நீதிமன்றம் அருகே இருந்து யாத்திரையை தொடங்கி பாளையங்கோட்டை மார்க்கெட் வடக்கு பஜார், தெற்கு பஜார் வழியாக பாளையங்கோட்டை ராஜகோபால சுவாமி கோவில் முன்பு யாத்திரையின் இருபதாவது நாள் காலை பயணத்தை நிறைவு செய்தார்.. இந்த யாத்திரையின் ஒரு பகுதியில் பாளையங்கோட்டை பகுதியில் அமைந்திருக்கக்கூடிய சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் சிலைக்கு பாஜக மாநில தலைவர் தெரிவித்து மரியாதை செய்தார்.


யாத்திரை நடைபெற்ற சுமார் நான்கு கிலோமீட்டர் உள்ள சாலையின் இரு புறங்களிலும் பொதுமக்கள் மற்றும் பாஜக தொண்டர்கள் குழுமியிலிருந்து யாத்திரையில் கலந்து கொண்டவர்களை மலர் தூவி வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து ராஜகோபால சுவாமி திருக்கோவில் முன்பு திறந்த வேனில் நின்று பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசும் பொழுது, "பாரத பிரதமர் நரேந்திர மோடி பத்தாண்டு கால ஆட்சியில் மக்களுக்கான பல நல்ல திட்டங்களை செய்து வருகிறார். திருநெல்வேலி என்றாலே விவசாயத்தின் மகிமையை உணர்த்தக்கூடிய, ஓர் மகாபாரதத்தில் இடம் பெற்ற தாமிரபரணியை கொண்ட மகிமையான ஊராக திகழ்கிறது. தாமிரபரணி ஆறு இந்தியாவின் மிக மோசமான குப்பைகள் இருக்கும் நதியாக உள்ளது.. மக்கள் பயன்படுத்தும் தாமிரபரணி நதிநீரில் சுத்தத்தை விட ஆறு மடங்கு அசுத்தம் உள்ளது. புண்ணிய நதியான தாமிரபரணி நதி திராவிட மாடல் ஆட்சியில் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.


நதிநீரில் சுத்தத்தை அளவீடு செய்யும் பி ஓ டி குறியீடு தாமிரபரணி நதியில் 18. 5 சதவீதமாக உள்ளது. இது அசுத்தத்தின் அளவு அதிகம் உள்ளதை குறிப்பிடுகிறது. தமிழகத்தின் நதிகள் தான் இந்தியாவில் அசுத்தமான நதிகளாக மாறி உள்ளது. திருநெல்வேலியின் முக்கிய பிரச்சினையாக உள்ளது தாமிரபரணி தான். தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் கூட தலைமைச் செயலாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளது. யார் சொன்னாலும் புரிந்து கொள்ளாத நிலையில் உள்ள தமிழக முதலமைச்சர் தாமிரபரணி நதியை முழுமையாக சுத்தம் செய்ய தனி பட்ஜெட்டை ஒதுக்க வேண்டும். ஸ்மார்ட் சிட்டி இருப்பதின் கீழ் கட்டப்பட்ட வ உ சி மைதானத்தின் மேற்கூரை உடைந்து சேதமாகி உள்ளது. திமுக மத்திய அரசு கொடுக்கும் பணத்தை கமிஷன் அடிப்பதையே கொள்கையும், குறிக்கோளாகவும் வைத்துள்ளனர்.


மத்திய அரசு மூலம் நலத்திட்டத்திற்கு தமிழகத்திற்கு என பத்து லட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மோடி அரசு மக்களுக்கு வீடு கட்டி கொடுத்து வீட்டுக்கான சுத்தமான குடிநீரையும் தந்து கொண்டிருக்கிறது. வீடு வீடாக தண்ணீர் கொடுக்கும் மத்திய அரசு திட்டத்தில் திமுக பத்தாயிரம், 20,000 என பெற்றுக் கொண்டு வருகிறது. திமுகவின் மாநகராட்சி மேயரை மாற்றுவதற்கு திமுகவினுடைய கவுன்சிலர்கள் 40க்கும் மேற்பட்டோர் கையெழுத்து போட்டு முதலமைச்சருக்கு கடிதம் அளித்துள்ளனர். மாநகராட்சியில் நடக்கும் அனைத்து திட்டங்களுக்கும் மாநகராட்சி மேயர் கமிஷன் தொகை பெறுவதாக கவுன்சிலர்களே குற்றம் சாட்டி வருகின்றனர்.. ஒவ்வொரு விஷயத்துக்கும் 30% வரை கமிஷன் கேட்பதாக மேயர் மீது கவுன்சிலர்கள் குற்றம் சாட்டி கடிதம் அனுப்பி உள்ளனர். திருநெல்வேலியில் ஊழல் மடிந்து விட்டது. திமுகவில் தலைவன் சாராயத்தை ஆலையில் காச்சுகிறான், தொண்டன் பானையில் காச்சுகிறான்.




ஒரு நாளைக்கு 18 முறை செய்தியாளர்களை சந்திக்கும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் 4 மாதங்களாக செய்தியாளர்களை சந்திக்கவே இல்லை. திமுகவில் நடப்பது போன்ற மோசமான அவல நிலை தமிழகத்தில் இதுவரை நடந்ததே கிடையாது. 22 மாதங்களாக தேர்தலில் கொடுத்த எந்த ஒரு திட்டங்களையும் நிறைவேற்றாத திமுகவின் முதலமைச்சர் ராமநாதபுரத்தில் நடந்த கூட்டத்தில் பிரதமர் எதையும் செய்யவில்லை என வாய் கூசாமல் பொய் குற்றச்சாட்டை முன்வைத்து வருகிறார். 2014 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை விவசாயிகளை யாரும் மதிக்கவில்லை. பல விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட நிலையும் இருந்தது. 2014 ஆம் ஆண்டுக்கு பின்பு விவசாயத்திற்கு பிரதமர் மிகவும் முக்கியத்துவம் கொடுத்து மிகப்பெரிய புரட்சியை செய்து விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பு செய்துள்ளார்.


பிரதமர் மோடி ஆட்சிப் பொறுப்பேற்ற பின்பு 24 வைகையான விவசாய பொருட்களின் குறைந்தபட்ச ஆதார விளையும் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலினை யாரோ ஏமாற்றி துண்டு சீட்டில் தேவையில்லாத தகவல்களை எழுதி கொடுக்கிறார்கள். விவசாயிகளுக்காக பாரத பிரதமர் இரண்டு அல்ல மூன்று மடங்கு நல்ல திட்டங்களை செய்து வருகிறார். முதல்வருக்கு எழுதி கொடுக்கும் துண்டு சீட்டை அவர் படிப்பதற்கு முன்பு ஒரு ஐஏஎஸ் அதிகாரியிடம் கொடுத்து சரிபார்த்துக் கொண்டு மேடைகளில் பேச வேண்டும். முதல்வர் மேடையில் சொல்லும் தகவல்களும் புள்ளிவிபரங்களும் சரியாக இருக்க வேண்டும். கடன் வாங்குவதிலேயே தமிழகம் நம்பர் ஒன் மாநிலமாக மாற்றப்பட்டுள்ளது.


மக்கள் உரிமை தொகை திட்டம் கொடுப்பதாக கூறிவிட்டு ஒன்றரை கோடி பெண்களை தமிழக அரசு நிராகரித்து உள்ளது. மகளிர் உரிமைத்தொகை திட்டம் என்பது இந்திய அரசியலிலேயே மிகப்பெரிய பிராடு திட்டம். இந்தியாவின் முதல் கடங்கார மாநிலமாக தமிழகம் உள்ளது. ஆட்சிக்கு வந்த முதல் வாரத்திலேயே உரிமை தொகை கொடுப்பதாக சொன்ன திமுக அரசு செப்டம்பர் மாதத்தில் இருந்து பெண்களுக்கு கொடுக்கும் உரிமை தொகையை 27 ஆயிரம் ரூபாயை கொடுத்து தொடங்க வேண்டும். தமிழகத்தை குடிகார மாநிலமாக மாற்றி வருகிறார்கள். திமுக ஆட்சியில் ஜாதி கலவரங்கள் அதிகரித்து வருகிறது. வாரம் வாரம் தமிழகத்தில் ஜாதியை மையப்படுத்தி திரைப்படங்கள் திரையிடப்படுகிறது. அதில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கிறார். அந்த படங்களை பார்த்து முதலமைச்சர் கருத்து சொல்கிறார்.


காவல்துறைக்கு ஜாதி ரீதியிலான பிரச்சனைகளை தலையிட்டு தடுப்பதற்கு நேரம் சரியாக போய்விட்டது. இந்தியாவில் அதிக தனியார் மருத்துவ கல்லூரிகள் இருப்பது தமிழகத்தில் மட்டும்தான். இருபதாம் தேதி காலை மருத்துவ கல்லூரிகள் தொடர்பான அனைத்து பட்டியலும் வெளியிட்டு பாஜக அனைவரின் தோளையும் உரிக்கும். மேனேஜ்மென்ட் சீட்டு குறைந்த அதன் காரணமாகவே நீட் தொடர்பாக திமுகவினர் பேசி வருகிறார்கள். நீட் தேர்வு திமுகவிற்கும் திமுகவை சேர்ந்த தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கும் மட்டுமே எதிரானது. சாதாரண மக்களுக்கு அவர்களை சார்ந்தவர்களுக்கும் நீட் எதிரானது அல்ல. தமிழகத்தில் திமுக பொய் சொன்னதை இதுவரை அனைவரும் கேட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனால் இனி பாஜக அதனை விடாது. 24 மணி நேரத்தில் திமுகவின் பொய்கள் அனைத்தையும் உடைத்து மக்களுக்கு வெட்டு வெளிச்சமாய் காட்டிவிடும் என தெரிவித்தார்.


இந்த யாத்திரை பயணத்தின் போது நெல்லை மாநகராட்சியின் முன்னாள் மேயரும் திமுக உறுப்பினருமான புவனேஸ்வரி பாஜகவில் அண்ணாமலை முன்பு இணைந்து கொண்டார். சாலை வழியெங்கும் பொதுமக்கள் வழங்கும் புகார் மனுக்களையும் அண்ணாமலை பெற்றுக் கொண்டார். இந்த யாத்திரை பயணத்தின் போது பிரம்மாண்டமான செம்மறி ஆடு உடன் வந்த பாஜக தொண்டர் ஒருவர் பசு மாட்டு தீவனங்களுக்கு மானியம் வழங்குவதை போன்று ஆடுகளுக்கும் தீவனம் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு கொண்டுவர வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்..