வன்னியர் சங்க தலைமை அலுவலகம் ( vanniyar sangam building )

 

செங்கல்பட்டு மாவட்டம் பரங்கிமலையில் மாநில தலைமை வன்னியர் சங்கம் கட்டிடத்தில் பிற மாவட்டங்களை சேர்ந்த, கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் தங்கிருப்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோன்று அரசு போட்டி தேர்வுக்கு பயிற்சி எடுப்பவர்களும், இங்கு தங்கி அதற்கான பயிற்சிகளை பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது. பரங்கிமலையில், இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான காசிவிஸ்வநாதர் கோவில் உள்ளது. இந்த கோவில், 43 ஆண்டுகளுக்கு முன், வடபழனி  கோவிலுடன் இணைக்கப்பட்டது. தொடர்ந்து, காசி விஸ்வநாதர் கோவில் நிர்வாகத்தை, வடபழனி  கோவில் நிர்வாக அதிகாரிகளே கவனித்து வருகின்றனர்.



 

கோவிலுக்கு சொந்தமான இடம்,  பரங்கிமலை, பட் சாலையில் 39,531 சதுர அடி இடமும் அதில் 2,179 சதுர அடி இடத்தில் கட்டடம் ஒன்றும் உள்ளது. இந்த நிலமானது வருவாய் பதிவேட்டில் காலம் கடந்த குத்தகை நிலம் எனத் தாக்கலாகியுள்ளது. இதனை கோயில் பயன்பாட்டுக்கு தற்காலிகமாகப் பயன்படுத்திக்கொள்ள காசி விஸ்வநாதர் தேவஸ்தானத்துக்கு தமிழக அரசால் அனுமதி வழங்கப்பட்டிருந்து. ஆனால் இங்கு  ‘வன்னியர் சங்கக் கட்டிடம்’ என்ற பெயரில் கட்டிடம்  , செயல்பட்டு வருவதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு சார்பில் இந்த நிலம் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள இடம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



 

முன்னதாகவே நோட்டீஸ் 

 

நில விவகாரம் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் சார்பில், வழக்கு தொடரப்பட்டு பல்வேறு நீதிமன்றங்களில், வன்னியர் சங்க சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகத்திற்கு ஆதரவாக உத்தரவு பெறப்பட்டுள்ளதாகவும் வருவாய்த் துறையினர் தெரிவித்தனர். இந்த நிலையில் இந்த இடத்தில் இருக்கும் ஆக்கிரமிப்பு அகற்ற கூறி கடந்த நவம்பர் மற்றும் மார்ச் ஆகிய மாதங்களில், நோட்டிஸ் கொடுத்திருப்பதாக வருவாய்த்துறைனர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி, பல்லாவரம் தாசில்தார் ஆறுமுகம் தலைமையிலான வருவாய் துறை அதிகாரிகள், மேற்கண்ட இடத்திற்கு நேற்று சென்றனர். அதில் கட்டப்பட்டுள்ள கட்டடத்தையும் பூட்டி சீல் வைத்தனர்.
  



 

மெட்ரோ பணி மேற்கொள்ள : இந்த நிலையில் இவ்விடத்தில் தற்பொழுது சென்னை மெட்ரோ பணிக்காக பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார்.

 

 

காவல்துறை குவிப்பு

 

அதிகாரிகளின் இந்நடவடிக்கையால், அப்பகுதியில் போராட்டம் நடத்தாமல் இருக்க முன்னெச்சரிக்கையாக ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். இந்தநிலையில், முன்னாள் மத்திய இணை அமைச்சரும் பாமக மூத்த நிர்வாகியுமான ஏகே மூர்த்தி சம்பவ இடத்தில் காவல்துறையினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.



 

ஏ.கே மூர்த்தி கூறுவது என்ன :  40 வருடங்களுக்கு முன்பாக தனி நபரிடமிருந்து, வாங்கப்பட்ட இந்த நிலம் தொடர்ந்து வன்னியர் சங்கம் சார்பில் நிர்வகித்து வருவதாகவும் , பள்ளி, கல்லூரி மாணவர்கள் தங்கி படிப்பதற்கான வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளன. இந்த கட்டிடத்தை எந்தவித முன்னறிவிப்பும், இன்றி  திடீரென வருவாய்த் துறையினர் சீல் வைத்துள்ளனர் எனவும் தெரிவித்தார்.

 

மேலும் , இந்த நிலத்திற்கு வருவாய்த்துறை, ராணுவம், இந்து அறநிலைத்துறை என மூன்று பிரிவினர் சொந்தம் கொண்டாடி வரும் நிலையில், பல ஆண்டுகள் அனுபவத்தில் உள்ள நிலம் என்கிற அடிப்படையில் வன்னியர் சங்கத்திற்கு, இந்த நிலத்தை ஒத்திக்கு விட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அதற்கான தொகையை எந்த துறையிடம் செலுத்த வேண்டும் என தெரிவித்தால், அதை செலுத்துவதற்கு தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.  வருவாய்த்துறை மற்றும் காவல் துறையின் கோரிக்கை ஏற்க பாமகவினர் , எந்தவித போராட்டத்திலும் ஈடுபடப் போவதில்லை எனவும் தெரிவித்த, அவர் அங்கிருந்த தொண்டர்களுடன் அமைதியாக கலைந்து சென்றார்.

 



 

வன்னியர் சங்கத் தலைவர் பு.தா.அருள்மொழி கண்டனம் : 

 

வன்னியர் சங்க அலுவலகத்தில் தங்கி, போட்டித் தேர்வுகளுக்கும், பட்டப்படிப்புக்கும் தயாராகி வந்த மாணவர்களை, எந்த வகையிலும் சம்பந்தப்படாத வருவாய்த் துறை அப்புறப்படுத்தியது கண்டிக்கத்தக்கது என்று வன்னியர் சங்கத்தின் தலைவர் பு.தா.அருள்மொழி கூறியுள்ளார்.  ஆலந்தூர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை 10 ஆண்டுகளாக நடைபெற்று வரும் போதிலும், அந்த வழக்கை நடத்த இந்து சமய அறநிலையத்துறை எந்த வகையிலும் ஆர்வம் காட்டவில்லை. ஒவ்வொரு முறையும் அறநிலையத்துறை வழக்கறிஞர் வழக்கை ஒத்திவைக்கக் கோருவதையே வாடிக்கையாகக் கொண்டிருந்தார். அந்த வழக்கு வரும் 28-ஆம் நாள் விசாரணைக்கு வரவிருந்த நிலையில் தான், இந்த நிலத்திற்கும், வழக்குக்கும் எந்த வகையிலும் தொடர்பில்லாத வருவாய்த்துறை, வன்னியர் சங்க தலைமை அலுவலகத்தில் புகுந்து மாணவர்களை கட்டாயமாக அப்புறப்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ளார்

 

நீதிமன்றம் உத்தரவு

 

தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக வன்னியர் சங்கம் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், சுமந்தா காமினி என்பவரிடம் இருந்து இந்த நிலத்தை வாங்கியதாகவும், தற்போது அங்குள்ள கட்டிடத்தில் உயர் கல்வி படிக்கும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களின் விடுதி செயல்பட்டு வருகிறது. எனவே நிலத்தில் இருந்து காலி செய்யும்படி அரசு அனுப்பிய நோட்டீஸுக்கு தடை விதிக்க வேண்டும். அந்த நிலத்தில் சங்கம் செயல்படுவதில் தலையிடக் கூடாது என அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தனர்.

 

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், வழக்கு தொடர்பாக இரு தரப்பும் ஆவணங்களை தாக்கல் செய்ய அவகாசம் கோரியதை அடுத்து வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 22ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். அதுவரை தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் எனக்கூறி, கட்டிடத்தை இடிக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.