மதுரை விமான நிலையத்தில் கடந்த வாரம் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இருந்தபோது அமமுக நிர்வாகி எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறாக பேசியுள்ளார். இதனிடைய அதிமுக கட்சி நிர்வாகிகள் அவதூறு பேசிய நபர் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உட்பட சிலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனை கண்டித்து தமிழக முழுவதும் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக அதிமுக மாநகர் மாவட்டம் சார்பாக இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாசலம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக அமைப்புச் செயலாளர் செம்மலை, முன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். 



அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் மீது பொய் வழக்கு போட்டு திமுக வஞ்சிப்பதாக கூறி கண்டன கோஷங்களை எழுப்பினர். மேலும் திமுக அரசு போட்ட வழக்கை திரும்ப பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள்,தொண்டர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக அமைப்பு செயலாளர் செம்மலை உரையாற்றுகையில், குளறுபடியான துக்ளக் தர்பார் ஆட்சியை தாண்டிவிட்டது திமுக ஆட்சி,தமிழகத்தில் பாதுகாப்பிற்கு பங்கம் ஏற்பட்டுவிட்டது என்பதை குறிக்கும் விதமாக தான், மதுரையில் நடைபெற்ற சம்பவம் உள்ளது. Y பிரிவு பாதுகாப்பில் உள்ள அரசியல் தலைவர், பாதுகாப்பு அதிகாரி மீது வழிப்பறி வழக்கு போடப்பட்டுள்ளது.காவல்துறை பாதுகாப்பு அதிகாரியின் மீது தமிழக காவல்துறை வழக்கு பதிவு செய்கிறது இது எந்த விதத்தில் நியாயம் என்று பேசினார். காவல்துறையினர் இந்திய தண்டனை சட்டத்தை முழுமையாக படியுங்கள்.முதலமைச்சர் பாதுகாப்பு பணியில் இருக்கும் காவல்துறையினர், முதல்வரை புகைப்படம் எடுக்கும் போது செல்போனை தட்டி விடுவார்கள் அவர்கள் மீதும் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளதா என்று கேள்வி எழுப்பினார்.



எடப்பாடி பழனிசாமி என்பது போடப்பட்ட. வழக்குப் பொய் வழக்கு என்பது உறுதியாகிவிட்டது. எனவே அவர் மீது போட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும், உண்மையான தவறு செய்தவர்களை வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.இவ்வாறு செயல்பட்டால் தான், சட்டத்தின் ஆட்சியாக திமுக ஆட்சி நடைபெற்று வருகிறது என்று அர்த்தம், இல்லாவிட்டால் பழிவாங்கும் நடவடிக்கையாக பொதுமக்கள் பார்ப்பார்கள். மக்களின் ஆட்சியின் மீது உள்ள அதிருப்தியை திசை திருப்ப வேண்டும் என்பதற்காக இந்த வழக்குபதிவு போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி எதையும் எதிர்கொள்ள கூடியவர் எதற்கும் அஞ்சாதவர். 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமையும். 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் பிரதமர் மோடிக்கான தேர்தல் என்றார்.


இதனிடையே அதிமுக அமைப்புச் செயலாளர் செம்மலை பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியது, திமுக கூட்டணி கட்சியின் திமுக ஆட்சி குறித்து விமர்சிக்கவில்லையா என்று கேள்வி எழுப்பிய அவர், கூட்டணி கட்சியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் திமுக ஆட்சி குறித்து விமர்சித்துள்ளார். ஆட்சியாளர்களை குறைசொல்லி உள்ளார். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எதுவாக இருந்தாலும் சரி, அவர்கள் தங்களது கருத்துக்களையும், மாறுபாடுகளையும் குறிப்பிட்டு செல்வதில் எந்த தவறும் இல்லை என்று கூறினார்.