தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீட்டுக்கு  வழிவகை செய்யும் வகையில், 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி அ.தி.மு.க ஆட்சியில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதன்பின் இது தொடர்பான அரசாணை திமுக ஆட்சியில் வெளியிடப்பட்டது. இந்நிலையில், 10.5 %  இடஒதுக்கீட்டுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டன. இது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணை நடைபெற்றது.



 

வன்னியர் சமூகத்திற்கு வழங்கப்பட்ட 10.5% இட ஒதுக்கீட்டை மதுரை உயர்நீதிமன்றம் ரத்து செய்த நிலையில், தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று அளித்த தீர்ப்பில் வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீட்டை ரத்து செய்த மதுரை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு செல்லும் உத்தரவிட்டது. இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றம்  அளித்துள்ள தீர்ப்பை வரவேற்று, முக்குலத்தோர் புலிப்படைத்தலைவர் கருணாஸ் சிவகங்கையில் உள்ள பண்ணை வீட்டில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, அரசியல் உள் நோக்கத்திற்காக ஒதுக்கப்பட்ட 10.5% இட ஒதுக்கீடு உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இது ஒட்டுமொத்த சமூகநீதிக்கு கிடைத்த வெற்றியாக புலிப்படை பார்க்கிறது.




 

அரசியலமைப்பு சட்டத்தில் 15, 16 பிரிவை சுட்டிக்காட்டி உச்சநீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியிருக்கிறது. ஒட்டுமொத்த தமிழகத்திலே பெருவாரியான மக்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகள் மறுக்கப்பட்டு ஒரு குறிப்பிட்ட சமூகம் மட்டும் பயன் அடைவது எந்த வகையில் நியாயம் என்பதை உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.





ஒட்டுமொத்த தமிழகத்திலுள்ள அனைத்து தரப்பட்ட ஜனத்தொகை கணக்கெடுத்து அந்த அடிப்படையில் தான் இது போன்ற உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி கொண்டிருக்கிறேன். உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மிகமிக வரவேற்கிறேன். வரக்கூடிய காலங்களில் அடுத்த தலைமுறைகளுக்கான உரிமைகளை நிலைநாட்டுவதற்கான அங்கீகரிக்கப்பட்ட தீர்ப்பாக தான் இதை புலிப்படை பார்க்கிறது என பேசினார்.