மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாடக்குளம் கிராமத்தில் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூபாய் 25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சமுதாய கூடத்தை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று திறந்து வைத்தார். மாடக்குளம் கண்மாய் கரை அருகில் இருக்கக்கூடிய அய்யனார் கோயில் எதிரே கட்டப்பட்ட இந்த சமுதாயக் கூடத்தை இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக துவக்கி வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், ”தி.மு.க ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. தி.மு.க ஆட்சியில் ரவுடிகளுக்கு சுதந்திரம் கிடைக்கிறது என்றார்.
தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகளே ரவுடிகள் பட்டியலில் உள்ளதால், ரவுடிகளை கைது செய்ய காவல்துறை அச்சப்படுகிறது. செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவதன் காரணமாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. கைப்பேசியில் விரும்பத்தகாத காட்சிகள் வருவதால் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்க காரணமாக உள்ளது “ என்றார்.
அமைச்சரை ஒரு துறையில் இருந்து வேறொரு துறைக்கு மாற்றம் செய்யப்பட்டது தண்டனை ஆகாது. வட்டார வளர்ச்சி அலுவலரை ஜாதி பெயரை கூறி திட்டியதாக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்ட ராஜகண்ணப்பன் குறித்து செல்லூர் ராஜூ பதில் அளித்தார். மேலும்.” பாரதப் பிரதமர் அவர்களே முதல்வர் சந்திப்பது வழக்கமான ஒன்றுதான். திமுக அமைச்சர்கள் மத்திய அரசை ஒன்றிய அரசு என சொல்லி சிறுமைப்படுத்தி வருவது பிரதமர் மனதை காயப்படுத்தி இருக்கும். தமிழக மக்களின் நலனுக்காக அதிகமான கோரிக்கைகளுடன் பிரதமரை சந்திக்கும் டெல்லி பயணத்தில் முதல்வர் வெற்றி பெற்று வர வேண்டும். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறக்கூடிய சித்திரை திருவிழா பொதுமக்கள் எளிதில் வந்து செல்வதற்கு ஏதுவாக போக்குவரத்து வசதி குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்தித் தர வேண்டும்.
சித்திரைப் பொருட்காட்சி என்றால் தமுக்கம் மைதானம் தான் மக்களின் மனதில் நின்று வருகிறது மீண்டும் தமுக்கம் மைதானத்தில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவது வரவேற்கத்தக்கது. பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து அ.தி.மு.க வலுவான அழுத்தம் கொடுக்கும். தலைமைக் கழகம் முடிவு எடுக்கும் பட்சத்தில் தலைமை கழக அறிவுறுத்தலின்படி நிச்சயம் வலுவான ஒரு போராட்டம் அ.தி.மு.க நடத்தும்” என்றார். இந்த நிகழ்வில் மதுரை மாநகர் மாவட்ட கழக துணை செயலாளர் ராஜா மற்றும் பொருளாளர் அண்ணாதுரை, மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் கருப்பசாமி உட்பட ஏராளமான கட்சி பிரமுகர்களும் தொண்டர்களும் பெண்களும் கலந்து கொண்டனர்
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - மதுரை - சிங்கப்பூர் பயணத்துக்கு, இன்று முதல் மீண்டும் நேரடி விமான சேவை துவக்கம்..