நாடெங்கிலும் மீண்டும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதை அடுத்து அனைத்து மாநில முதல்வர்களுடனான கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார் பிரதமர் நரேந்திரமோடி சந்திப்புக்குப் பிறகான தனது உரையில் கொரோனா தடுப்பூசி மையங்கள் அதிகரிக்கப்பட வேண்டியதன் தேவையை அவர் குறிப்பிட்டுள்ளார்.


நம்பிக்கை அதீத நம்பிக்கையாகிவிடக்கூடாது:




கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியா 96 சதவிகிதம் வரை வெற்றிகண்டுள்ளது


கடந்த வாரத்தில் மட்டும் இந்தியாவில் 1.56 லட்சம் புதிய கொரோனா பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.மகாராஷ்டிராவில் மட்டும் நேற்று ஒரே நாளில் 18,000 பேருக்குக் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாத இறுதியில் தொடங்கித் தமிழகமும் தொடர்ச்சியாக அதிக எண்ணிக்கையிலான கொரோனா பாதிப்புகளைப் பதிவு செய்து வருகிறது.தற்போது வரை 836 புதிய கொரோனா பாதிப்புகள் தமிழகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்திருப்பதை சுகாதாரச் செயலாளர் ராதாகிருஷ்ணனும் உறுதி செய்துள்ளார். இந்த நிலையில்தான் அனைத்து மாநில முதல்வர்களுடனான கூட்டத்தைக் கூட்டினார் பிரதமர் நரேந்திர மோடி. அதில் பேசிய அவர், “கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியா 96 சதவிகிதம் வரை வெற்றிகண்டுள்ளது. நமது கொரோனா இறப்பு எண்ணிக்கையும் ஒப்பீட்டு அளவில் மிகமிகக் குறைவு. ஆனால் இந்த வெற்றி கொடுத்திருக்கும் நம்பிக்கை அதீத நம்பிக்கையாகிவிடக்கூடாது. கொரோனா இரண்டாவது அலை உருவாகாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். நாட்டிலிருந்து முற்றிலுமாக இந்த வைரஸை ஒழிப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.குறிப்பாக கிராமப்புறங்களுக்கு இந்த வைரஸ் பரவாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். சோதனை,பரவலைக் கண்டறிதல் மற்றும் சிகிச்சை (Test, Track and Treat) என்பது மிக முக்கியம். தடுப்பூசி மையங்களை அதிகரிக்க வேண்டியிருக்கிறது. சுகாதாரப்பணியாளர்களுக்கான தடுப்பூசி போடும் செலவுகளை முழுக்க முழுக்க மத்திய அரசே ஏற்றுக்கொள்ளும். தனி மனித இடைவெளியை மிகவும் தீவிரமாக அனைவரும் கடைபிடிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.