நாடு முழுவதும் மே 1ஆம் தேதியான இன்று முதல் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. ஆனால், பல மாநிலங்களுக்கு போதிய அளவு கொரோனா தடுப்பூசிகள் சென்று சேராததாலும், முறையான அறிவுறுத்தல்களை மத்திய அரசு கொடுக்காததாலும் இன்று 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.




அறிவிப்பும், இணையதள பதிவும்


கொரோனா 2வது அலை நாடு முழுவதும் தீவிரமாக பரவி வரும் நிலையில், இதுவரை 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வந்தது. இந்நிலையில் மத்திய அரசு 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என அறிவித்து, கடந்த 28ஆம் தேதி முதல் இணையதள பதிவையும் தொடங்கியது. இணையதள பதிவு தொடங்கிய சில மணி நேரங்களிலேயே லட்சக்கணக்கானோர் பதிவு செய்ய தொடங்கியதால், இணையதளம் முடங்கியது. பின்னர், அந்த இணையதளம் செயல்பட பல மணி நேரம் ஆனது.




தமிழ்நாட்டிலும் திட்டம் தொடங்கப்படவில்லை


பல மாநிலங்களில் போதிய அளவு தடுப்பூசிகள் கையிருப்பில் இல்லாததால் இன்று 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்படாது என அறிவித்திருக்கின்றன. இது குறித்து ஏபிபி நாடு செய்தி நிறுவனத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டியில் கூட, இதுவரை மத்திய அரசு 18 வயதிற்கு மேற்பட்டோர் அனைவருக்கும் தடுப்பூசி போடுவது குறித்த அறிவுறுத்தல்களை வழங்கவில்லை என்றும், போதிய தடுப்பூசிகள் கிடைக்காமல் மே 1 முதல் அனைவருக்கும் தடுப்பூசி என்ற அறிவிப்பை செயல்படுத்துவது சாத்தியமில்லை எனவும் தெரிவித்திருந்தார்.  இதே கருத்தை நேற்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ள ராதாகிருஷ்ணன், தமிழக அரசு ஆர்டர் செய்துள்ள 1.50 கோடி தடுப்பூசிகள் வந்தால்தான் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படும் என்றார்.  அதன்படி, இன்று தமிழகத்தில் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படவில்லை.



தடுப்பூசிகள் கையிருப்பில் இல்லை என கைவிரித்த மாநிலங்கள்


அதேபோல், கர்நாடாகவிலும் 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு மட்டுமே தடுப்பூசி இன்று போடப்படும் என தெரிவித்துள்ள அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர், 18 முதல் 44 வயது வரை உள்ளவர்கள் அரசு அறிவிக்கும் வரை தடுப்பூசி செலுத்திக்கொள்ள வர வேண்டாம் என தெரிவித்துள்ளார்.


கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்ட்ரா, பஞ்சாப், சத்தீஸ்கர், பீகார், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களிலும் போதிய தடுப்பூசிகள் இல்லாததால் இந்த திட்டம் இன்று தொடங்கப்படவில்லை. மே 15ஆம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என குஜராத் அரசும், எங்களிடம் போதிய தடுப்பூசிகள் இல்லை என டெல்லி மற்றும் மத்திய பிரதேச அரசும் கைவிரித்துள்ளன. இதனால், 18 வயதிற்கும் மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி என்று மத்திய அரசு அறிவித்த திட்டம் இன்று செயல்பாட்டிற்கு வருவதில் சிக்கலும், சிரமமும் ஏற்பட்டுள்ளது.



முறையான திட்டமிடல் இல்லாத அறிவிப்புகளை தொடர்ந்து மத்திய அரசு வெளியிட்டு வருவதாக குற்றம் சாட்டும் சமூக ஆர்வலர்கள், மாநிலங்களுக்கு போதிய தடுப்பூசிகளை உடனடியாக வழங்க பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.