திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே மூவாநல்லூர் கிராமத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கு செயல்பட்டு வருகிறது. இந்த கிடங்கில் நெல் மூட்டைகளை லாரியில் ஏற்றி இறக்கும் பணியில் சுமார் 30க்கும் மேற்பட்ட தற்காலிக தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் மன்னார்குடி அடுத்த பாமணி கீழ தெருவைச் சேர்ந்த நடராஜன், சத்யா, மற்றும் காரைக்கோட்டை பகுதியை சேர்ந்த சக்தி ஆகிய மூன்று தொழிலாளர்கள் காலை வழக்கம்போல் நெல் சேமிப்பு கிடங்கு வேலைக்கு சென்றனர். கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக கிடங்கில் வைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் ராட்சத தார்பாய்கள் கொண்ட தனி தனி அட்டிகளாக மூடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் காலை முதல் வெயில் அடித்ததால் ஒவ்வொரு பக்கமும் ஒவ்வொருவர் நின்று கொண்டு தார்பாய்களை இறக்கிக் கொண்டிருந்தனர். அப்போது மேலே இருந்து நெல் மூட்டைகள் அனைத்தும் திடீரென நடராஜன் மீது சரிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்த மாவட்ட ஊராட்சித் தலைவர் பாலசுப்பிரமணியன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் ராஜராஜன், துணை மேலாளர் ஜேக்கப், முன்னாள் ஒன்றியக்குழு துணைத்தலைவர் தனராஜ், ஆகியோர் சம்பவ இடத்தை நேரில் சென்று விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும் இறந்தவரின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட அதிகாரிகள் நடராஜன் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வேலை வழங்கப்படும், அரசு வழங்கும் உதவிகள் விரைந்து தரப்படும் என உறுதி அளித்தனர். இதனையடுத்து மன்னார்குடி நகர காவல் உதவி ஆய்வாளர் முருகன் தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் பிரபாகரன் உள்ளிட்ட காவல்துறையினர் சம்பவ இடத்தில் இருந்த தொழிலாளர்களின் உதவியோடு நடராஜன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த திமுக மாவட்ட செயலாளரும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் சம்பவ இடத்தை பார்வையிட்டு சம்பவம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு சென்று அங்கிருந்த உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார். தொடர்ந்து நடராஜனின் கிராமத்திற்கு நேரில் சென்ற எம்எல்ஏ பூண்டி கலைவாணன் இறந்த நடராஜனின் மனைவி செல்வராணி மகன்கள் அரிராஜ் அருண்ராஜ் மெர்வீன் ராஜ் ஆகியோருக்கு ஆறுதல் கூறி நிதி உதவி வழங்கினார். இந்த நிகழ்வின்போது மாவட்ட ஊராட்சி தலைவர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட திமுகவினர் உடன் இருந்தனர்.