வேப்பிலையில் பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி போன்ற பண்புகள் இருப்பதால், இதனைத் தினமும் உட்கொள்ளும்போது உடல் ஆரோக்கியத்துடனும், நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.
பண்டைய காலங்களிலிருந்து இந்தியாவில் மிகவும் பிரபலமான மூலிகையாகவும், தெய்வமாகவும் வழிபடும் மரம் தான் வேப்பமரம். இதில் வேம்பின், பூஞ்சை காளான் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி, வைட்டமின்கள் மற்றும் 130 க்கும் மேற்பட்ட பயனுள்ள பண்புகளை கொண்டிருக்கிறது. இதன் காரணமாகவே சர்க்கரை நோய், அம்மை, வயிற்றில் புழு போன்ற பல விதமான நோய்களுக்கு மருந்தாக நாம் பயன்படுத்தி வருகிறோம். கசப்பு தன்மையுடன் வேப்பிலை இருப்பதால் இதனை தினமும் உட்கொள்ளும் போது ஏற்படும் நன்மைகள் ஏராளமாய் உள்ளன. இந்நேரத்தில் வேப்பிலையினால் வேறு என்னென்ன நன்மைகள் உள்ளது என நாம் அறிந்து கொள்வோம்.
பற்கள் ஆரோக்கியமாக இருக்க உதவும் வேப்பிலை:
நம் முன்னோர்கள் காலத்தில் பல் துலக்குவதற்கு என்று எந்தவித பேஸ்ட் மற்றும் பிரஷ் இல்லை. வேம்பு தான் அவர்களுக்கு அனைத்துமாக இருந்துள்ளது. இப்படி வேப்பக்குச்சி வைத்து பல் துலக்கியதால் வயதாகும் போது தான் அவர்களுக்கு பற்களில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. ஆனால் தற்போது சிறு வயதில் இருந்தே பற்களில் பல பிரச்சனைகளை நாம் சந்தித்துவருகிறோம். இதனையெல்லாம் தவிர்க்கும் விதமாகத்தான் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு விற்பனையாகும் பல பற்பசைகளில் வேப்பிலை தான் மூலப்பொருளாக இருந்துவருகிறது. வேப்பிலை பல் ஈறுக்களுக்கு அடியில் உள்ள பாக்டீரியாக்களைக் கொல்வதோடு வாய் துர்நாற்றம் ஏற்படுவதைத் தடுக்கிறது. மேலும் வெள்ளை நிறப்பற்களுக்கும் உறுதியளிக்கிறது. எனவே வாரத்தில் சில நாள்களாவது பற்பசை மற்றும் பிரஷ்களுக்கு லீவு விட்டு வேப்பக்குச்சியை பயன்படுத்தக் கற்றுக்கொள்வோம்.
தோலில் ஏற்படும் பிரச்சனைகளுக்குத் தீர்வு:
சின்னம்மை, பெரியம்மை என எந்த அம்மை நோய் தாக்குதலுக்கு ஆளானாலும் முதலில் வீட்டு வாசலில் மற்றும் போர்வைக்குப் பதில் வேப்பிலையைத்தான் விரித்து நம்மை படுக்கச்சொல்வார்கள். அந்தளவிற்கு தோல் பிரச்சனைகளை சரி செய்ய வேப்பிலை உதவியாக உள்ளது. வேப்பிலையை வைக்கும் போது அம்மையால் ஏற்படும் எரிச்சல் கட்டுப்படுகிறது. மேலும் அம்மை நோய் குணமாகும் வரை வேப்பிலை அரைத்து தான் குளிக்க வேண்டும் என முன்னோர்கள் கூறுவார்கள். ஏனென்றால் இதில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகம் இருப்பதால் விரைவில் தீர்வு காண்கிறது.
இதோடு மட்டுமின்றி உடலில் ஏற்படும் எந்தவித அழற்சி, முகப்பரு, புண்கள் இருந்தால் வேப்பிலை அல்லது வேப்பம் பூவை அரைத்து தடவினால் நல்ல பலனளிக்கும். எனவே வாரத்தில் இரண்டு முறையாவது இவ்வாறு செய்தால் முகப்பளபளப்பு ஏற்படும். தற்போது வேப்பிலை கலந்து பல பேஸ் வாஸ்களும் விற்பனையாகிறது.
தலைமுடி ஆரோக்கியத்திற்கு உதவும் வேப்பிலை:
பற்பசை போலவே எண்ணெய் மற்றும் ஷாம்புகள் தயாரிக்கவும் வேம்பு பயன்படுகிறது. இதனால் முடி நல்ல ஆரோக்கியத்தோடு இருப்பதாகவும் பொடுகு போன்றவை வராமல் தடுக்கிறது. தலை முடியை வேரிலிருந்து பாதுகாக்கவும் வேப்பிலை உதவியாக உள்ளது. இதோடு மட்டுமின்றி வேப்பிலைச்சாறு புற்றுநோய் உயிரணுக்களின் பெருக்கத்தைத் தடுத்து புற்றுநோயை எதிர்த்துப்போராட உதவியாக உள்ளது. மேலும் காய்ச்சல், மலச்சிக்கல் போன்ற பல நோய்களுக்கு நல்ல தீர்வாகவும் உள்ளது.