இந்திய உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா பொறுப்பேற்கவிருக்கிறார். வரும் 23 ஏப்ரலில் தற்போதைய தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே பணி ஓய்வுபெறவிருக்கும் நிலையில்  அடுத்த தலைமை நீதிபதிக்கான பரிந்துரையை அனுப்பக்கோரி மத்திய சட்டத்துறை அமைச்சர் கடந்த மார்ச் மாதம் 19-ஆம் தேதி அவருக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.


அதற்கு பதிலளித்து எழுதிய கடிதத்தில் உச்சநீதிமன்ற மூத்த நீதிபதி என்.வி.ரமணாவின் பெயரைப் பரிந்துரைத்துள்ளார். இந்தியாவின் 48-வது தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்கவிருக்கும் ரமணா வரும் 26 ஆகஸ்ட் 2022 வரைக்கும் அந்தப் பதவியில் இருப்பார்.  




நூதலபட்டி வெங்கட்ரமணா (எ) என்.வி.ரமணா ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். ஆந்திர உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞராகப் பதவி வகித்த ரமணா வருடம் 2000-இல் அதன் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர் 2013-இல் டெல்லி உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் பதவி வகித்தவர் அதற்கடுத்த மூன்றே மாதங்களில் உச்சநீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார்.


63 வயதாகும் என்.வி.ரமணா ஆந்திர தலைமைச் செயலகமான அமராவதிக்கான நிலக் கையகப்படுத்தலில் தனது உறவினர்களுடன் சேர்ந்துகொண்டு ஊழலில் ஈடுபட்டதாக  அந்த மாநில முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்குக் கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது.