மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 28 மீனவ கிராமங்களில் அனுசரிக்கப்பட்ட சுனாமி தின நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். தமிழ்நாட்டில் கடந்த 2004 -ஆம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி ஆழிப்பேரலை என்கின்ற சுனாமியால் மயிலாடுதுறை மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். அவ்வாறு உயிரிழந்தவர்கள் நினைவாக டிசம்பர் 26 -ஆம் தேதி சுனாமி தினம் கடைபிடிக்கப்படுகிறது. ஒருங்கிணைந்த நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மட்டும் 6 ஆயிரத்து 66 பேர் ஆழிப்பேரலையில் சிக்கி உயிரிழந்தனர். இதில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 28 மீனவர் கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பலியாயினர்.




சுனாமி ஏற்பட்டு 19 ஆண்டுகளைக் கடந்தும் அதனுடைய பாதிப்புகளை மீனவர்கள் இதுவரை மறக்க முடியாமல் இருந்து வருகின்றனர். பலரது வாழ்க்கை நொடிபொழுதில் மாறிபோனது, இத்தகைய சுனாமி நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இன்று 19 -ம் ஆண்டு சுனாமி தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறை கடற்கரை கிராமங்களில் சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு அவர்களின் உறவினர்கள் திதி கொடுத்து இந்த கருப்பு தினத்தை அனுசரித்தனர். அதன் ஒன்றாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த திருமுல்லைவாசல் மீனவ கிராம மீனவர்கள் திருமுல்லைவாசல் பேருந்து நிலையம் அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் இருந்து சுனாமி நினைவுத் தூண் வரை சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் 500 -க்கும் மேற்பட்ட மீனவர்கள் சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் தலைமையில் ஊர்வலமாக சென்று,




திருமுல்லைவாசல் கடற்கரையோரம் அமைக்கப்பட்டுள்ள சுனாமி நினைவு ஸ்தூபிக்கு மலர்வளையங்கள் வைத்து மலர்கள் தூவினர். அதைத்தொடர்ந்து நினைவுத் தூண் அருகில் இறந்தவர்கள் நினைவாக வைக்கப்பட்டிருந்த செங்கற்களுக்கு மலர்களைத் தூவினர், மேலும் அங்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். இதேபோன்று தரங்கம்பாடியில் மட்டும் 315 பேர் உயிரிழந்தனர். சுனாமியால் உயிரிழந்த அனைவருக்கும் அவர்களது குடும்பத்தினரும் கிராம மக்களும் ஆண்டுதோறும் நினைவஞ்சலி செலுத்தி வழிபாடு செய்வது வழக்கம். இந்நிலையில் 19 -ஆம் ஆண்டு நினைவு தினமான இன்று தரங்கம்பாடியில் சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு அவர்களது குடும்பத்தினர் கடற்கரை மீன் விற்பனை கூடத்தில் யாகம் வளர்த்து தர்ப்பணம் கொடுத்து, கடலில் பால் ஊற்றி அஞ்சலி செலுத்தி வழிபாடு செய்தனர். 




தொடர்ந்து கிராம மக்கள் கருப்பு பேச் அணிந்து 700-க்கும்‌ மேற்பட்டோர் மவுன ஊர்வலமாக தரங்கம்பாடி கடை வீதியில் உள்ள நினைவு ஸ்தூபிக்கு சென்று மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினார். பின்னர், தரங்கம்பாடி பழைய ரயில் நிலையம் அருகே சுனாமியால் உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்த இடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்‌. இதுபோல மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள சந்திரபாடி, சின்னூர்பேட்டை, சின்னங்குடி, குட்டியாண்டியூர், வெள்ளகோயில், மாணிக்கபங்கு, வானகிரி, பழையார், கூழையார், தொடுவாய், பூம்புகார் உள்ளிட்ட பல்வேறு மீனவ கிராமங்களில் சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.


Tsunami Day: அழியாத வடுவாக மாறிய “டிசம்பர் 26” : சுனாமி தாக்கியதன் 19-ஆம் ஆண்டு நினைவு இன்று..


சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. நினைவு அஞ்சலி நிகழ்ச்சியில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா.முருகன், பாஜக மாவட்ட தலைவர் அகோரம் உள்ளிட்ட அரசியல் கட்சி பிரமுகர்களும் கலந்துகொண்டு சுனாமியில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.